IND vs AUS : இந்த சிம்பிள் டெக்னிக்க கோச் கிட்ட கத்துக்கோங்க, ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறும் சூரியகுமாருக்கு கவாஸ்கர் ஆலோசனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக இத்தொடரில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சூரியகுமார் யாதவ் முதலிரண்டு போட்டிகளில் சந்தித்த முதல் பந்திலேயே அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணியை அடித்து நொறுக்கும் அவர் 180க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் பெரிய ரன்களை விளாசி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார்.

Suryakumar Yadav

- Advertisement -

மேலும் எப்படி போட்டாலும் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விடும் அவர் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடப்படும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறியுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவர் கடந்த 10 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் 25.47 என்ற பேட்டிங் சராசரியில் சுமாராக செயல்பட்டு வருகிறார்.

சிம்பிள் டெக்னிக்:
குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அசால்டாக 3 சதங்களை அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார். இதனால் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய இவர் நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் உச்சகட்ட பார்மில் இருந்தும் டெக்னிக்கல் அளவில் மட்டுமே சூரியகுமார் தடுமாறுவதாக தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் அதை பேட்டிங் பயிற்சியாளரிடம் கற்றுக் கொண்டால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக 2 போட்டிகளிலும் மிட்சேல் ஸ்டார்க் வீசிய பந்துகளில் அச்சில் வார்த்தர் போல் எல்பிடபிள்யூ முறையில் சூரியகுமார் அவுட்டானார். அதற்கு டி20 கிரிக்கெட்டைப் போலவே ஒருநாள் போட்டிகளிலும் ஓப்பன் ஸ்டேன்ஸ் பயன்படுத்தி சூரியகுமார் பேட்டிங் செய்வதே காரணம் என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் ஒரு சில சிறிய டெக்னிக்கல் அளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். அதில் அவருடைய ஓப்பன் ஸ்டேன்ஸ் ஒன்றாகும். டி20 கிரிக்கெட்டுக்கு அது மிகவும் நல்லது. ஏனெனில் ஓவர் பிட்ச்சாகி வரும் எந்த பந்தையும் அப்படி நிற்கும் போது அவரால் எளிதாக பிளிக் ஷாட் அடித்து சிக்ஸராக பறக்க விட முடியும். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் கால்களுக்கு அருகே வலது புறத்தில் பந்து பிட்ச்சாகி வரும் போது ஓப்பன் ஸ்டேன்ஸில் நிற்பதால் நிச்சயமாக அவருடைய பேட்டும் லைனுக்கு குறுக்கே தான் வரும்”

Sunil-gavaskar

“அந்த சமயத்தில் பேட் நேராக வராது. எனவே அது போன்ற நேரங்களில் ஒருவேளை பந்து உள்ளே திரும்பி வந்தால் அதை எதிர்கொள்வதற்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக இதிலிருந்து எப்படி வெளியே வரலாம் என்பதை பற்றி பேட்டிங் பயிற்சியாளரிடம் சூரியகுமார் யாதவ் சில நேரங்களை செலவழித்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் டி20 பேட்டிங் டெக்னிக்கை ஒருநாள் கிரிக்கெட்டிலும் பயன்படுத்துவதே இந்த தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.

இதையும் படிங்க:IND vs AUS : பேட்டை வெச்சுகிட்டு என்ன பண்றிங்க? எப்போதும் பேட்டிங் பிட்ச் கிடைக்குமா – இந்திய பேட்ஸ்மேன்களை விளாசும் ஜஹீர் கான்

ஏற்கனவே தாமதமாக 30 வயதில் அறிமுகமான அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான டெக்னிக்கை விரைவில் கற்றுக் கொண்டு அசத்தினால் மட்டுமே அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கோப்பையில் வாய்ப்பு பெற முடியும். மேலும் தற்சமயத்தில் இருக்கும் இந்த ஃபார்மை விட்டால் வேறு எப்போது ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட போகிறோம் என்பதை அவரும் நினைத்து பார்த்து தேவையான பயிற்சிகளை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement