சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணி அந்த மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
3 ஆவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் நிகழ்த்திய சாதனை :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது ஜனவரி 28-ஆம் தேதியான இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டியில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக 3000 ரன்கள் அடித்த வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே உள்ளனர். ரோகித் சர்மா 159 போட்டியில் விளையாடி 4231 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 4188 ரன்களோடு இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அவர்களுக்கு அடுத்து சூரியகுமார் யாதவ் 102 டி20 போட்டிகளில் விளையாடி 2959 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் இருக்கும் வேளையில் இன்றைய போட்டியில் அவர் மேலும் 41 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக 3000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் பிரைன் லாராவை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய – ஜோ ரூட்
அதோடு ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை நிகழ்த்தும் 12-வது சர்வதேச வீரராகவும் மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி எந்தவொரு டி20 தொடரையும் இழக்காமல் இருந்து வரும் வேளையில் அடுத்ததாக 2026 டி20 உலககோப்பை தொடரிலும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.



