சுயநலம் பார்க்காமல் தனது அணிக்காக அதிரடியாக செயல்பட்டு காப்பாற்றிய சூரியகுமார் யாதவ் – ரஞ்சி போட்டி சுவாரசியம்

Suryakumar Yadav Ranji
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையின் 2022 – 23 சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 27ஆம் தேதியன்று துவங்கிய 42வது லீக் போட்டியில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் மும்பை மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின. எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 289 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் வாசவடா 75 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக சம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா 4, யசஸ்வி ஜெய்ஸ்வால் 2 என இளம் அதிரடி தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 6/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை காப்பாற்ற முயன்ற கேப்டன் ரகானேவும் 24 ரன்களில் ஆட்டமிழந்ததால் 67/3 என மேலும் தடுமாறியது. ஆனால் முதல் விக்கெட் விழுந்ததுமே 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் எதிர்ப்புறம் விக்கெட் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் வழக்கம் போல ஆரம்ப முதலே தமக்கே உரித்தான அதிரடியான ஸ்டைலில் ரன்களை குவித்தார்.

- Advertisement -

அணியின் வீரர்:
குறிப்பாக அடுத்து வந்த மற்றொரு இளம் வீரர் சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்த அவர் தரமாக பந்து வீசிய சௌராஷ்டிரா பவுலர்களிடம் எளிதில் விக்கெட்டை தாரை வார்க்காமல் பேட்டிங் செய்தார். அதே சமயம் எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் இடையிடையே பவுண்டரிகளை பறக்க விட்டு ரன்களை குவித்த அவரது அட்டகாசமான பேட்டிங்கால் ஓரளவு மீண்டெழுந்த மும்பை 150 ரன்களை கடந்தது. அதில் ஒருபுறம் சர்ப்ராஸ் கான் மெதுவாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் அரைசதம் கடந்து 14 பவுண்டரி 1 சிக்சருடன் சதத்தை நெருங்கிய போது துரதிஷ்டவசமாக கேட்ச் கொடுத்து 95 (107) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் 4வது விக்கட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை காப்பாற்றிய அவர் சதத்தை நெருங்கிய போது சுயநலமாக சிங்கிள், டபுள் ரன்களை எடுக்காமல் அணியின் நலனுக்காக பவுண்டரி அடிக்க முயற்சித்து 88.79 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அவுட்டானார். முன்னதாக இந்த ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை விளையாடிய முதல் போட்டியிலும் அதிரடியாக விளையாடிய அவர் 15 பவுண்டரி 1 சிக்சருடன் 90 (80) ரன்களை 112.50 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

தற்போது மீண்டும் 95 ரன்களில் அவுட்டான அவர் “யாருங்க அசிங்கமா சதம் அடிச்சுக்கிட்டு, சதத்தை விட அணியின் நலம் தான் முக்கியம்” என்ற வகையில் அடுத்தடுத்த போட்டிகளில் 90களில் அவுட்டாகியுள்ளார். இத்தனைக்கும் ரஞ்சி கோப்பை போன்ற டெஸ்ட் போட்டியில் அவ்வளவு அதிரடியாக விளையாட வேண்டிய அவசியமும் கிடையாது. ஆனாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி தனது அணிக்கு விரைவாக ரன்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ள அவர் இந்தியாவுக்காகவும் சரி தனது மாநில அணிக்காகவும் சரி டி20 போட்டிகளாக இருந்தாலும் சரி டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியாகத்தான் விளையாடுகிறார்.

அந்த அணுகு முறையில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு தனது அணிக்காக வெற்றிகளை குவித்து வரும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். மேலும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: AUS vs RSA : கையில் ரத்தம் சொட்ட அர்ப்பணிப்புடன் போராடும் ஆஸி வீரர், திணறும் தெ.ஆ – இந்தியாவுக்கு பிரகாசமாகும் வாய்ப்பு

இங்கு விஷயம் என்னவெனில் அவருக்கு முன்பாக அறிமுகமாகி நிலையான இடத்தையும் நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுள்ள சில வீரர்கள் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்தியாவின் நலனைத் தாண்டி சுயநலத்துடன் விளையாடாமல் அவரை பின்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement