
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 2024 ஆம் ஆண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டு என அடுத்தடுத்த டி20 உலக கோப்பை வென்ற முதல் அணியாகவும், அதிகமுறை டி20 உலக கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் இந்திய அணி இரட்டை சாதனையை நிகழ்த்தியிருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது 2026 ஐ.பி.எல் தொடரானது நடைபெற இருக்கும் வேளையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு மத்தியில் தரவரிசை பட்டியல் வெளியாவது வழக்கம். அந்தவகையில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிந்த கையோடு இந்த தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் வெளியாகியுள்ள டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அபிஷேக் சர்மா 875 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் 871 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாம் இடத்தினை பிடித்துள்ளார். அதற்கு காரணம் யாதெனில் : இந்த நியூசிலாந்து தென்னாப்பிரிக்க தொடரின் போது முன்னணி வீரர்கள் இல்லாமல் இரண்டாம் தர அணி விளையாடியதாலே சூரியகுமார் யாதவுக்கு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணியில் மீண்டும் கம்பேக் குடுத்தது, சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனானது குறித்து – இஷான் கிஷன் பேச்சு
பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை ரஷீத் கான் 753 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து வருண் சக்கரவர்த்தி 740 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை சிக்கந்தர் ராசா 328 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் ஹார்டிக் பாண்டியா 299 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.