ரிச்சர்ட்ஸ், சச்சின் வரிசையில் அவர் இந்த நூற்றாண்டின் சிறந்த ப்ளேயர் – இந்திய வீரரை மனதார பாராட்டிய கபில் தேவ்

Kapil-Dev
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்று 2023 புத்தாண்டை வெற்றிகரமாக துவக்கிய இந்தியா அடுத்ததாக 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு வெற்றிகளை பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவின் (112*) அதிரடியான சதத்தால் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற சூரியகுமாரின் பேட்டிங்கை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மெய் மறந்து போனார்கள் என்றே சொல்லலாம்.

SUryakumar Yadav 112

- Advertisement -

ஏனெனில் பொதுவாகவே களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் பெரும்பாலான போட்டிகளில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவிக்கும் அவர் இப்போட்டியில் முகத்துக்கு நேராக வந்த ஃபுல் டாஸ் பந்தை அப்படியே முட்டி போட்டு விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலே சிக்ஸராக அடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதே போலவே விழுந்து விழுந்து விக்கெட் கீப்பர் நிற்கும் பின் திசையில் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்று எதிரணியையே வியக்க வைத்தார்.

நூற்றாண்டில் ஒருவர்:
அந்த வகையில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து தன்னை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடுவதற்கேற்ப மாயாஜால பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதையும் நிரூபித்தார். அதை விட சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 3 சதங்களை அடித்த தொடக்க வீரர் அல்லாத வீரர் மற்றும் 3 சதங்களை 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்ட முதல் வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தது அவருடைய தனித்துவமான தரத்திற்கும் திறமைக்கும் சான்றாக அமைந்தது.

Suryakumar-Yadav

மேலும் தொடக்க வீரர்களே தடவலாக செயல்படும் இந்த டி20 யுகத்திலும் அழுத்தமான மிடில் ஆர்டரில் களமிறங்கி 180+ என்ற தன்னுடைய கேரியர் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ள சூரியகுமார் உண்மையிலேயே மிகச் சிறந்த வீரர் என்று பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். அந்த வரிசையில் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், விராட் கோலி, டீ வில்லியர்ஸ் வரிசையில் சூரியகுமார் யாதவ் தாம் கண்ட நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர் என்று முன்னாள் ஜாம்பவான் இந்திய கேப்டன் கபில் தேவ் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சில நேரங்களில் அவருடைய ஆட்டத்தை எப்படி வர்ணிப்பது என்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை பார்க்கும் போது எப்போதாவது அவர்களைப் போன்ற ஒரு ஆட்டக்காரர் இருப்பார் என்று நினைப்போம். அந்த பட்டியலில் அவரும் ஒருவராக இருக்க வேண்டும் என்று தற்போது நினைக்கிறோம். இந்தியாவில் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர் கிரிக்கெட்டை விளையாடும் விதம் அபாரமாக உள்ளது”

kapildev

“குறிப்பாக பைன் லெக் திசைக்கு மேல் அவர் அடிக்கும் சிக்ஸர் எதிரணியின் பந்து வீச்சாளரை பயமுறுத்துகிறது. அவரால் நின்ற இடத்திலேயே மிட் ஆன் மற்றும் மிட் விக்கெட் திசைகள் மீதும் சிக்ஸர் அடிக்க முடிகிறது. அதனால் அவருக்கு எதிராக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவது மிகவும் கடினமாகும். ஏனெனில் அவர் நல்ல லைன் மற்றும் லென்த்துக்களை தொடர்ந்து கச்சிதமாக பிடித்து அடிக்கிறார். நான் எனது வாழ்நாளில் ரிச்சர்ட்ஸ், ஏபி டி வில்லியர்ஸ், சச்சின் டெண்டுல்கர், விராட், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட நிறைய பேட்ஸ்மேன்களை பார்த்திருக்கிறேன்”

இதையும் படிங்க2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வாய்ப்புள்ள 5 நட்சத்திர வீரர்கள் – லிஸ்ட் இதோ

“ஆனால் ஒரு சிலர் மட்டுமே அவரைப் போல் பந்தை தெளிவாக அடிக்க முடியும். உங்களுக்கு தலை வணங்குகிறேன் சூரியகுமார் யாதவ். அவரைப் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருவார்கள்” என்று மனதார பாராட்டினார்.

Advertisement