இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியானது நேற்று பார்படாஸ் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 32 ரன்களையும் குவித்து அசத்தினார்.
பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சித்திர வீரர் சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 53 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் காரணமாக காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதுடன் சேர்த்து சூரியகுமார் யாதவ் தனது 64-வது போட்டியிலேயே 15-வது ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். அதன்மூலம் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியின் முக்கிய சாதனை ஒன்றினையும் அவர் சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க : 28 ரன்ஸ்.. ஹாட்ரிக் எடுத்து வங்கதேசத்தை அசால்ட்டாக வீழ்த்திய ஆஸ்திரேலியா.. 17 வருடம் கழித்து கமின்ஸ் வரலாற்று சாதனை
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலி 120 இன்னிங்ஸ்களில் 15 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று முதலிடத்தில் இருந்தார். அந்த சாதனையை சூரியகுமார் யாதவ் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.



