இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று பல்லக்கல்லே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்தியா அணி நிர்ணயிக்கிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 58 ரன்களையும், ரிஷப் பண்ட் 49 ரன்களையும் குவித்தனர். பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரியான் பராக் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 26 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 58 ரன்கள் குவித்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் பெற்ற இந்த ஆட்டநாயகன் விருது மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க : விட்ருந்தா 240 அடிச்சுருப்பாங்க.. இந்தியாவை கட்டிப்படுத்தியும் தோற்க இதான் காரணம்.. இலங்கை கேப்டன் வருத்தம்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 125 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 16 முறை ஆட்டநாயகன் விருது பெற்றிருந்த வேளையில் சூரியகுமார் யாதவ் வெறும் 69 போட்டியிலேயே அந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



