ரோஹித் சர்மா நீக்கத்தால் சோகம்.. பும்ராவை தொடர்ந்து பாண்டியாவுக்கு.. சூரியகுமார் வெளியிட்ட எதிர்ப்பு பதிவு?

Suryakumar Yadav MI
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ள நிலையில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் டிரேடிங் முறையில் வலுக்கட்டாயமாக வாங்கியது.

அப்போது ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா இருக்கும் போது பாண்டியாவை மும்பை வாங்கியது ஏன் என்ற குழப்பமும் கேள்வியும் ரசிகர்களிடம் காணப்பட்டது. அதே சமயம் 36 வயதை கடந்து விட்ட ரோகித் சர்மாவுக்கு பதிலாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதற்காகவே மும்பை 15 கோடிகள் கொடுத்து வாங்கியதாக செய்திகள் வலம் வந்தன.

- Advertisement -

பும்ராவை போல:
அதனால் ஏமாற்றமடைந்த நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா “அமைதியாக இருப்பதே அனைத்திற்கும் சிறந்த பதில்” என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது 2015 முதல் மும்பை அணியில் முக்கிய வீரராக 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய தம்மை அடுத்த கேப்டனாக நியமிக்காமல் பாண்டியாவை நியமிப்பதற்கு பும்ரா மறைமுகமான எதிர்ப்பை தெரிவித்தார்.

தற்போது ரோகித்தை கழற்றி விட்டு பாண்டியாவை கேப்டனாக அறிவித்த மும்பை அணி நிர்வாகம் வதந்திகளாக வந்த செய்திகளை உண்மையாகியுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. குறிப்பாக சச்சின், பாண்டிங் தலைமையில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்து வந்த உங்களுக்கு 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் மொத்தம் 5 கோப்பைகளை அலமாரியில் அடுக்கிய ரோகித் சர்மாவை நன்றி மறந்து கழற்றி விடலாமா என மும்பை ரசிகர்களே கொந்தளித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நட்சத்திர மும்பை வீரர் சூரியகுமார் யாதவ் “உடைந்த இதயத்தின் ஸ்மைலியை” பதிவிட்டு ரோகித் சர்மா மும்பை கேப்டனாக நீக்கப்பட்டதற்கு மறைமுகமான சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தான் நிறைய வாய்ப்புகளையும் ஆதரவுகளையும் கொடுத்து இன்று சூரியகுமார் இந்திய அணியில் விளையாடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதையும் படிங்க: நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு

அப்படிப்பட்ட ரோகித் சர்மா தலைமையில் இனிமேல் விளையாட முடியாது என்பதை நினைத்தும் பாண்டியா தலைமையில் விளையாடப் போகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமலும் சூரியகுமார் இப்படி உடைந்த இதயத்தை பதிவிட்டு மறைமுக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இதனால் பும்ரா, சூரியகுமார் போன்ற வீரர்களிடம் ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆதரவில்லை என்பதும் தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement