விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ஆல் டைம் சாதனைகளை தூளாக்கிய சூரியகுமார் – புதிய சாதனை பட்டியல் இதோ

Suryakumar Yadav.jpeg
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக ஹர்திக் பாண்டியா தலைமையில் நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 191/6 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் இந்தியா அதிரடியாக செயல்பட்டது என்பதை விட சூரியகுமார் யாதவ் அதிரடியாக செயல்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Suryakumar Yadav

ஏனெனில் ரிஷப் பண்ட் 6, இஷான் கிசான் 36, ஷ்ரேயஸ் ஐயர் 13, கேப்டன் ஹர்டிக் பாண்டியா 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் 3வது இடத்தில் களமிறங்கி முதல் பந்திலிருந்தே வெளுத்து வாங்கிய சூரியகுமார் யாதவ் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் முரட்டுத்தனமாக அடித்தார். எப்படி போட்டாலும் நியூசிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 111* (51) ரன்கள் விளாசி இந்தியாவை தனி ஒருவனாக தூக்கி நிறுத்தினார்.

- Advertisement -

அபார சாதனைகள்:

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கடைசி நேரத்தில் ஹாட்ரிக் எடுத்த டிம் சௌதீ 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய நியூசிலாந்து ஆரம்ப முதலே அனலாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் 18.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் போராடி 61 (52) ரன்கள் எடுத்தார். அதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

Suryakumar Yadav

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி இதர பேட்ஸ்மேன்கள் சேர்ந்து வெறும் 69 ரன்கள் குவித்த நிலையில் தனி ஒருவனாக 111* ரன்கள் விளாசிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 20 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் இதே போல பெரும்பாலான போட்டிகளில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் முதல் பந்திலிருந்தே சரவெடியாக விளையாடும் சூப்பர் ஸ்டார் அணுகுமுறையை பின்பற்றும் அவர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்த வருடம் 1000 ரன்களை குவித்த பேட்ஸ்மேன், வரலாற்றிலேயே ஒரு காலண்டரில் 50 சிக்ஸ்ர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் போன்ற சாதனைகளை படைத்து குறுகிய காலத்திலேயே தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களும் ஜாம்பவான் வீரர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

Virat Kohli Suryakumar Yadav

1. அந்த வரிசையில் இப்போட்டியில் வென்ற ஆட்டநாயகன் விருதையும் சேர்த்து இந்த வருடம் மட்டும் சூரியகுமார் 7 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். இது வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்து புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 7* (2022)
2. விராட் கோலி : 6 (2016)

- Advertisement -

2. மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக சதமடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையையும் சூரியகுமார் படைத்துள்ளார். அதுபோக டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரது சாதனையும் உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 111*, 2022
2. ரோஹித் சர்மா : 80, 2017
3. ஷிகர் தவான் : 80, 2017

3. முன்னதாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணிலும் சதமடித்திருந்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த முதல் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

4. அதை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் வெளிநாட்டு மண்ணில் 2 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் எழுதியுள்ளார். இதற்கு முன் ரோகித் சர்மா உட்பட வேறு எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு மண்ணில் ஒரே வருடத்தில் 2 சதங்களை அடித்ததில்லை.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் செட்டாக மாட்டாரு, இவரை நெனச்சி அவரோட வாழ்க்கையை வீணடிக்காதீங்க – ரசிகர்கள் கோரிக்கை

5. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 பந்துகளுக்கு குறைவாக 2 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. 48 பந்துகள் – இங்கிலாந்துக்கு எதிராக, 2022
2. 49 பந்துகள் – நியூசிலாந்துக்கு எதிராக, 2022

Advertisement