ரிஷப் பண்ட் செட்டாக மாட்டாரு, இவரை நெனச்சி அவரோட வாழ்க்கையை வீணடிக்காதீங்க – ரசிகர்கள் கோரிக்கை

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது. நவம்பர் 18ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 191/6 ரன்கள் குவித்தது.

கேப்டன் ஹர்திக் பாண்டியா உட்பட இதர அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக 3வது இடத்தில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் நியூசிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்த நம்பிக்கை நாயகன் சூரியகுமார் யாதவ் 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 111* (51) ரன்கள் குவித்தார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கடைசி நேரத்தில் ஹாட்ரிக் எடுத்த டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 192 ரன்களை நியூசிலாந்து ஆரம்பம் முதல் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து 18.5 ஓவரில் 126 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டார்:
டேவோன் கான்வே 25, கிளென் பிலிப்ஸ் 12 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 61 (52) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார். அதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த ராகுல் – ரோகித் ஆகிய தடவலான ஓப்பனிங் ஜோடிக்கு மாற்றாக புதிய அதிரடி ஓப்பனிங் ஜோடியை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள இந்தியா இத்தொடரில் இஷான் கிசான் – ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளித்தது.

இதில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையும் மிஞ்சும் அளவுக்கு சதங்களை விளாசி நிரந்தர இடத்தை பிடித்துள்ள ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான 2017 முதல் இதுவரை விளையாடிய 64 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் ஒரு முறை கூட ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதில்லை. இருப்பினும் நல்ல திறமையை கொண்டிருக்கும் அவரை பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாட உதவும் ஓப்பனிங் இடத்தில் களமிறக்கினால் வெற்றிகரமாக செயல்படுவார் என்று வாசிம் ஜாஃபர், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் போன்ற முன்னாள் வீரர்கள் சமீப காலங்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

அதை ஏற்ற பாண்டியா தலைமையிலான புதிய அணி நிர்வாகம் கொடுத்த வாய்ப்பில் தொடக்க வீரராக களமிறங்கிய அவர் வழக்கத்திற்கு மாறாக 13 பந்துகளை எதிர்கொண்டு தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். முந்தைய காலங்களிலாவது அழுத்தமான மிடில் ஆர்டரில் அவர் தடுமாறியதில் ஒரு நியாயம் இருந்தது ஆனால் இப்போட்டியில் பவர் பிளே வாய்ப்பில் அதிரடி சரவெடியாக செயல்பட வேண்டிய அவர் 46.15 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

ஏனெனில் அறிமுகமானது முதல் இதுவரை 1 முதல் 7 வரை அனைத்து பேட்டிங் இடத்திலும் அவருக்கு வாய்ப்பளித்து இந்திய அணி நிர்வாகம் உள்ளங்கையில் தாங்கி வருகிறது. ஆனாலும் விளையாட்டு பிள்ளையாக அதை வீணடித்து வரும் அவரைப் பார்க்கும் ரசிகர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு இவர் எந்த இடத்திலும் சரிப்பட்டு வர மாட்டார் என்று சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கிறார்கள்.

இதையும் படிங்க : IND vs NZ : நியூசி அணிக்கு எதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு காரணமே இவங்கதான் – கேப்டன் பாண்டியா பேசியது என்ன?

அத்துடன் இவரை போன்ற ஒருவருக்காக சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரருக்கு காலம் காலமாக அநியாயம் நடந்து வருவதாகவும் ரசிகர்கள் வேதனையை தெரிவிக்கிறார்கள். அதனால் அடுத்த போட்டியில் உடனடியாக அவரை நீக்கி விட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்குமாறு கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்திடம் வலுவான கோரிக்கை வைக்கிறார்கள்.

Advertisement