இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69-ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
ஐ.பி.எல் தொடரில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய சூரியகுமார் யாதவ் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 57 ரன்களையும், ரயான் ரிக்கல்டன் 27 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டு 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 187 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஷ் 73 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 62 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 39 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 57 ரன்கள் அடித்திருந்தார். அவர் அடித்த இந்த அரைசதத்தின் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை யாரும் செய்யாத மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அது குறித்த விவரம் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ் எந்தவொரு போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காத அவர் அனைத்து போட்டிகளிலும் 25 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் வில்லியம்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது சாதனையை முடித்துள்ளார். அந்தவகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு வில்லியம்சன் மற்றும் கடந்த 2023-ஆம் ஆண்டு சுப்மன் கில் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தங்கள் விளையாடிய 13 ஆட்டங்களில் தொடர்ந்து 25-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்திருந்தனர்.
இதையும் படிங்க : பஞ்சாப்பிடம் தோற்க இதான் காரணம்.. 5 கோப்பை ஜெய்ச்ச மும்பை எலிமினேட்டரில் ஜெய்க்கும்.. பாண்டியா பேட்டி
தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ள சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் 14 போட்டிகளில் தொடர்ச்சியாக 25 ரன்களுக்கு மேல் குவித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக இரண்டு முறை ஒரு சீசனில் 600 ரன்களை கடந்த வீரராகவும் தனது பெயரை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



