IND vs WI : அசால்ட்டாக ஆட்டநாயகன் விருதுகளை குவிக்கும் சூரியகுமார் – முகமது நபியின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

Suryakumar Yadav 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா முக்கியமான 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆகஸ்ட் 8ஆம் கயானாவில் நடைபெற்ற அப்போட்டியில் ப்ரெண்டன் கிங் 42 ரன்களும் ரோவ்மன் போவல் 40* ரன்களும் எடுத்த உதவியுடன் வெஸ்ட் இண்டீஸ் 159/5 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து 160 ரன்களை சேசிங் செய்த இந்தியாவுக்கு அறிமுகப் போட்டியில் ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 38/2 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் முதல் முறையாக தம்முடைய சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் விளையாடி 10 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (44) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

அசால்ட்டான ஆட்டநாயகன்:
அவருடன் திலக் வர்மா மீண்டும் சிறப்பாக செயல்பட்டு 49* (37) ரன்களும் கேப்டன் பாண்டியா 20* (15) ரன்களும் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே இலக்கை எட்டிப்பிடித்து இந்தியா வென்றது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி இக்கட்டான போட்டியில் 83 ரன்கள் குவித்து 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டி20 தொடரில் சந்திக்கும் தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடினமாக போராடி ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு தாமதமாக 30 வயதில் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியாக விளையாடி பெரிய ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறியுள்ளார். மேலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் கற்பனை செய்ய முடியாத ஷாட்களால் சிக்ஸர்களை பறக்க விடும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் (49 இன்னிங்ஸ்) என்ற ரோஹித் சர்மா மற்றும் (84 இன்னிங்ஸ்) விராட் கோலி (96 இன்னிங்ஸ்) ஆகியோரது சாதனைகளை தகர்த்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

- Advertisement -

அப்படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை விட இரு மடங்கு வேகத்தில் 100 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்து டி20 கிரிக்கெட்டில் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் இந்த போட்டியும் சேர்த்து மொத்தமாக 12 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற 2வது இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை சூரியகுமார் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 15
2. சூரியகுமார் யாதவ்/ரோகித் சர்மா : தலா 12

சொல்லப்போனால் 148 போட்டிகளில் ரோகித் சர்மா வென்ற 12 விருதுகளை சூரியகுமார் வெறும் 51 போட்டிகளிலேயே வென்று சமன் செய்துள்ளது வியப்பை கொடுக்கிறது. அந்த வகையில் உலக அளவிலான பட்டியலை புரட்டினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 12 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற ஆப்கானிஸ்தானின் முகமது நபி சாதனையை உடைத்துள்ள சூரியகுமார் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 51 போட்டிகள்
2. முகமது நபி : 70 போட்டிகள்
3. விராட் கோலி : 73 போட்டிகள்
4. ரோஹித் சர்மா : 138 போட்டிகள்

இதையும் படிங்க:ரொம்ப திட்டாதீங்க பாவம் என்ன செய்வாரு? தோனிக்கு கிடைச்ச அந்த வசதி ரோகித்துக்கு கிடைக்கல – விமர்சனங்களுக்கு யுவி பதிலடி

இப்படி அதிவேகமாக செயல்பட்டு வரும் அவர் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் ஆல் டைம் பட்டியலிலும் சிக்கர் தவானை மிஞ்சி குறுகிய காலத்திலேயே 4வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 4008 (115 போட்டிகள்)
2. ரோஹித் சர்மா : 3853 (148 போட்டிகள்)
3. கேஎல் ராகுல் : 2265 (72 போட்டிகள்)
4. சூரியகுமார் யாதவ் : 1780* (51 போட்டிகள்)
5. ஷிகர் தவான் : 1759 (68 போட்டிகள்)

Advertisement