
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருப்பது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சாதாரண வீரராக எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கிய அவர் சில வருடங்களுக்கு முன் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்தார். இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்ற பெயருடன் பல வெற்றிகளில் பங்காற்றிய அவர் கேப்டனாக வந்ததும் பெரிய ரன்கள் அடிக்கத் தடுமாறுகிறார். எனவே இந்தியாவின் வெற்றிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் ஃபார்ம் அவுட் என்று நினைக்க வேண்டாமென ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏனெனில் ரோகித் சர்மா போல அவரும் பேட்டிங்கில் அதிக ரிஸ்க் எடுத்து சுயநலமின்றி அதிரடியாக ரன்கள் குவிக்க முயற்சிப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“கேப்டனாக வந்த பின் சூரியகுமார் யாதவ் பேட்டிங் சராசரி குறைந்துள்ளதாக மக்கள் பேசுகின்றனர். அதைப் பொறுத்த வரை இந்திய அணி கிரிக்கெட்டின் புதிய பிராண்டை விளையாடத் துவங்கியுள்ளனர். அந்த வகையான கிரிக்கெட்டில் சூரியகுமார் 40 என்ற சராசரியைக் கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் நாம் எப்போதும் பேட்டிங் சராசரி பற்றிய சிந்தனைகளை மூழ்கடிக்க வேண்டும்”
“கேப்டனாக சூரியகுமார் அதிக ரிஸ்க்கு எடுத்து விளையாடுகிறார். அது சிறப்பானது. இதை ரோஹித் சர்மா காண்பித்தார். தம்முடைய விக்கெட்டில் எந்த விலையையும் வைக்காத அவர் ஆக்ரோஷமாக விளையாடுவதில் ஈடுபாடாக இருந்தார். சூரியகுமாரும் அதையே பின்பற்றுகிறார். அவர் அணியின் நன்மைக்காக தேவைப்படும் போது வெவ்வேறு பேட்டிங் இடங்களில் விளையாடுகிறார். 3வது இடத்தில் மட்டும் விளையாடுவதில்லை” என்று கூறினார்
இதையும் படிங்க: பைனலில் வென்று கோப்பையை வாங்க மேடைக்கு வந்தால் சூரியகுமார் என்ன செய்வார்? – புறக்கணிக்க வாய்ப்பிருக்கா?
இதைத் தொடர்ந்து இன்றைய போட்டியில் இந்தியாவை தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் கடைசி 7 போட்டிகளில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா 7 வெற்றிகளைக் கண்டுள்ளது. அதே போல இம்முறையும் பாகிஸ்தானுக்கு செயலில் பதிலடி கொடுத்து இந்தியா கோப்பையை வெல்லுமா? என்பதை பார்ப்போம்.