இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக துபாயில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.
முன்னதாக ரோகித் சர்மா தலைமையில் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலகக் கோப்பையில் இந்தியா தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்ற இந்தியா சமீபத்திய ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடர்களில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
கடைசி வாய்ப்பு:
இந்நிலையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் சர்மா வெல்ல வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 4 ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் இந்திய வீரர் என்ற தோனியின் (3) சாதனையை முந்தி அவர் புதிய சாதனைப் படைப்பார் என்றும் ரெய்னா கூறியுள்ளார். அதற்கு ரோஹித் அதிரடியாக விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் ரெய்னா இது பற்றி பேசியது பின்வருமாறு.
“ரோகித் சர்மா ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய அவர் ஃபைனலில் கூட அட்டாக் செய்தார். எனவே அவருடைய இந்த அணுகுமுறை தொடர வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதற்கு அவருடன் யார் துவக்க வீரராக விளையாடப் போகிறார் என்பது சாவியாகும். அது சுப்மன் கில்லாக இருப்பாரா?”
அதிரடி முக்கியம்:
“அவர்கள் ஒன்றாக விளையாடிய போது அதிரடியாக விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது. ரோகித் சர்மா ரன்கள் குவிக்கும் போது அது அவருடைய கேப்டன்ஷிப்பிலும் நன்றாக எதிரொலிக்கும். கேப்டனாக இதுவே அவருக்கு கடைசி ஐசிசி தொடராக இருக்கும். ஒருவேளை அதில் கோப்பையை வென்றால் 4 ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் இந்திய வீரராக அவர் சாதனை படைப்பார்”
இதையும் படிங்க: நிச்சயமா சொல்றேன் சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு செல்லும் 2 அணிகள் இதுதான் – ரிக்கி பாண்டிங் கணிப்பு
“ஏற்கனவே 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற அவர் 2013க்குப்பின் இந்த சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்வது சிறந்த சாதனையாக இருக்கும். அதற்காக அவர் உத்வேகமாக இருப்பார். ஆனால் அதற்கு ரோகித் சர்மா ரன்கள் குவிப்பது மிகவும் முக்கியம்” என்று கூறினார். அந்த வகையில் சுமாரான பார்மில் இருக்கும் ரோகித் சர்மா மீண்டும் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களிடம் விருப்பமாகவும் உள்ளது.