ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. 2008 முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றியுள்ளார். இருப்பினும் 42 வயதை தொட்டுள்ள அவர் சமீபத்திய வருடங்களில் முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டார்.
அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த சீசனில் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி சாதாரண கீப்பராக விளையாடினார். மேலும் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் மட்டுமே களமிறங்கிய அவர் அதிரடியாக பேட்டிங் செய்து ரசிகர்களை மகிழ்வித்தார். ஆனால் ருதுராஜ் தலைமையில் தடுமாற்றமாகவே விளையாடிய சென்னை நூலிலையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
ரெய்னா கருத்து:
அதன் காரணமாக சென்னையில் நடைபெற்ற ஃபைனலில் கோப்பையை வென்று தோனியை வெற்றிகரமாக வழியனுப்பும் வாய்ப்பையும் சிஎஸ்கே இழந்தது. அந்த சூழ்நிலையில் 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளது. அதற்கு முன் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால் தோனி விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது
இந்நிலையில் 2024 சீசனில் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கினாலும் அற்புதமாக பேட்டிங் செய்ததாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே 2025 சீசனில் தோனி மீண்டும் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ரெய்னா பேசியது பின்வருமாறு.
தோனி விளையாடனும்:
“கடந்த வருடம் எப்படி பேட்டிங் செய்தார் விதத்தை வைத்து எம்எஸ் தோனி ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவதை நான் விரும்புகிறேன். அதே போல கேப்டனாக ருதுராஜ்க்கு இன்னும் ஒரு வருடம் தேவை என்று கருதுகிறேன். கடந்த வருடம் அவர் நன்றாகவே கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின் அவருடைய கேப்டன்ஷிப் பற்றி பலரும் பல்வேறு விஷயங்களை பேசினார். உண்மையில் ருதுராஜ் நல்ல வேலையை செய்தார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஐபிஎல் வாய்ப்பு தேவையில்லை.. இந்தியாவிடம் எதிர்பார்ப்பது இது தான்.. கம்ரான் அக்மல்
இதற்கிடையே 2025 ஐபிஎல் ஏல விதிமுறைகள் வந்த பின் அடுத்த வருடம் விளையாடுவதற்கு பற்றி முடிவெடுக்க உள்ளதாக தோனி கூறியிருந்தார். குறிப்பாக 4க்கும் மேற்பட்ட வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதித்தால் தாம் விளையாடுவேன் என்று அவர் மறைமுகமாக தெரிவித்திருந்தார். மறுபுறம் தோனியை அன்கேப்ட் வீரராக தக்க வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



