மொத்தமாக விடைபெற்ற சின்னத்தல ரெய்னா – களமிறங்கும் புதிய தொடர் இதோ, அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

raina
- Advertisement -

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2005இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 3 விதமான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் போன்ற வரலாற்றுச் சாதனைகளை படைத்து நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் இந்தியா சரிந்த எத்தனையோ போட்டிகளில் களமிறங்கி தாங்கிப் பிடித்த இவர் வரலாற்றின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

குறிப்பாக 2011 உலக கோப்பை காலிறுதி மற்றும் அரையிறுதி ஆகிய முக்கியமான போட்டிகளில் அவர் எடுத்த வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய ரன்களே கோப்பையை வெல்ல உதவியது என்று அப்போதைய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியனார். அதேபோல் ஐபிஎல் தொடரில் 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்து எதிரணி பவுலர்களை பிரித்து மேய்ந்து ஏராளமான ரன்களையும் சாதனைகளையும் படைத்து வரலாற்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவரை வல்லுநர்கள் மிஸ்டர் ஐபிஎல் என்றும் தமிழக ரசிகர்கள் சின்னத்தல என்றும் கொண்டாடினார்கள்.

- Advertisement -

விடைபெற்ற ரெய்னா:
இருப்பினும் 2015 உலகக்கோப்பைக்குப் பின் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறிய அவர் அதனாலேயே தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலும் பார்மை இழந்தார். அந்த வகையில் இந்தியாவுக்காக கடந்த 2018இல் கடைசியாக விளையாடியிருந்த அவர் அதே வருடத்திற்குப் பின் ஐபிஎல் தொடரில் 400 ரன்களைக் கூட தொடுவதற்கு தடுமாறினார்.

அதன் உச்சகட்டமாக 2021 சீசனில் ரொம்பவே தடுமாறிய அவருக்கு ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த காரணத்தால் சென்னை அணி நிர்வாகம் ஆதரவளிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த வருடமே தக்கவைக்காமல் ஏலத்திலும் வாங்காத அந்த அணி நிர்வாகம் மொத்தமாக கழற்றிவிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

- Advertisement -

அதற்கிடையே 2020 சுதந்திர தினத்தில் தோனி ஓய்வு பெற்றபோது நட்புக்கு இலக்கணமாக 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த சுரேஷ் ரெய்னா நிதர்சனத்தை புரிந்து கொண்டு 2022 ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டார். அந்த நிலைமையில் தற்போது ஓய்வை மொத்தமாக அறிவித்துள்ள அவர் கடந்த சில வாரங்களாகவே நீண்ட நாட்கள் கழித்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

சச்சினுடன் ரெய்னா:
அப்போதே ஏதோ ஒரு வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடுவதற்காக தான் ரெய்னா தயாராகிறார் என்ற செய்திகளும் வெளியாகின. அத்துடன் எந்த ஒரு டி20 தொடர்ரிலும் விளையாடுவதற்கு முதலில் இந்தியா, ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடரிலிருந்து மொத்தமாக ஓய்வு பெறவேண்டும் என்ற விதிமுறையை பிசிசிஐ வைத்துள்ளது. எனவே இதர டி20 தொடரில் பங்கேற்பதற்காகவே தற்போது அதிகாரப்பூர்வமாக சுரேஷ் ரெய்னா இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெரிய வருகிறது.

- Advertisement -

இருப்பினும் இந்த ஒய்வால் ஸ்டைலான இடதுகை பேட்ஸ்மேனாக நம்பர் ஒன் பீல்டராக பலரின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்த அவரது ஆட்டத்தை இனிமேல் பார்க்க முடியாதா என்ற ஆதங்கம் நிறைய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் “ரோட் சேஃப்டி உலக சீரிஸ்” தொடரில் சுரேஷ் ரெய்னா களமிறங்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த வருடம் முதல் முறையாக நடைபெற்ற இந்த தொடரில் உலகின் 6 அணிகள் பங்கேற்ற நிலையில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. தற்போது அந்தத் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 1 வரை இந்தூர், ராய்பூர், கான்பூர், டேராடூன் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் யுவராஜ் சிங் போன்ற நட்சத்திரம் முன்னாள் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். தற்போது ஓய்வு பெற்ற கையோடு சுரேஷ் ரெய்னா அந்த தொடரில் களமிறங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளியாகியுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இதோ: சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், யூசுப் பதான், இர்பாப் பதான், முனாஃப் படேல், சுப்ரமணியம் பத்ரிநாத், ஸ்டூவர்ட் பின்னி, நமன் ஓஜா, மன்ப்ரீட் கோணி, பிரக்யான் ஓஜா, வினை குமார், அபிமன்யு மிதுன், ராஜேஷ் பவர், ராகுல் சர்மா.

Advertisement