இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 205 ரன்களை இலக்கைத் துரத்திய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
அப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா சதத்தை அடித்து 119 ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. ஏனெனில் சமீபத்திய தொடர்களில் அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விகளுக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் அந்தப் போட்டியில் 12 பவுண்டரிகளையும் 7 சிக்ஸர்களையும் பறக்க விட்டு 32வது ஒருநாள் சதத்தை விளாசி தனது தரத்தை நிரூபித்தார்.
ரெய்னா நம்பிக்கை:
அடுத்ததாக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் அவர் ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா அகமதாபாத் நகரில் நடைபெறும் அடுத்தப் போட்டியிலேயே தன்னுடைய 33வது ஒருநாள் சதத்தை அடிப்பார் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“69 மீட்டரில் ரோகித் சர்மா அடித்த முதல் சிக்ஸர் இன்னும் சிறப்பான வர்ணனைக்கு தகுதியானது. இருப்பினும் என்னுடைய குரல் கொஞ்சம் அந்த நேரத்தில் மந்தமாக இருந்தது. ஆனால் ரோகித் சர்மாவின் அந்தப் போக்கு தான் கிரேட் பிளேயருக்கான எடுத்துக்காட்டாகும். நேராக அவர் அடித்த அனைத்து ஷாட்டுகளையும் பாருங்கள். அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக தன்னுடைய ஃபுட் வொர்க்கை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினார்”
33வது லோடிங் ஆகுது:
“ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு பின் குறைவான டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ரோகித் ஸ்ட்ரைக்கை மாற்றுவதில் கவனம் செலுத்தினார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இது ரோகித் சர்மாவுக்கான நாள் என்று நான் சொன்னேன். ஏனெனில் கட்டாக் மைதானத்தில் அவருடைய ஃபீல்டிங் மிகவும் கூர்மையாக இருந்தது”
இதையும் படிங்க: இதைத் தான் சொன்னேன்.. இவ்ளோ செஞ்ச எனக்கு இது தெரியாதா? ஃபார்ம் பற்றி கேப்டன் ரோஹித் பேட்டி
“அப்படித்தான் பெரிய வீரர்கள் செயல்படுவார்கள். இன்று இந்தியா தொடரை வென்று விட்டது. ஆனால் அவர்கள் அகமதாபாத் நகரில் மற்றும் ஒரு வாய்ப்பை பிடிக்காமல் விடமாட்டார்கள். அங்கே 33வது செஞ்சுரி லோடிங் ஆகிறது என்று உங்களுக்கு நான் சொல்கிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து கடைசிப் போட்டி வரும் புதன்கிழமை அகமதாபாத் நகரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



