
இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கடந்த சீசன் வரை 205 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 5528 ரன்களை குவித்துள்ளார். சிஎஸ்கே ஏகப்பட்ட சாதனைகளை தன் வசம் வைத்துள்ள சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் வெற்றிகளுக்குப் பின்னால் ஒரு பெரிய பக்கபலமாக நின்று உள்ளார் என்றால் அது மிகையல்ல. ரசிகர்கள் மத்தியில் சின்ன தல என்று பெயர் பெற்ற சுரேஷ் ரெய்னா தோனி அடுத்ததாக சென்னை அணியில் அதிக ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர்.
அதோடு சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வெற்றிகளுக்கு பெரிய அளவில் கை கொடுத்தவர். அப்படிப்பட்ட ஜாம்பவான் வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தனக்கு பால்கனி இல்லாத அறையை வழங்கியதால் நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பினார்.
இதன் காரணமாக அந்த சீசன் முழுவதையும் விளையாடாத அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனிலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே சென்னை அணியில் விளையாடினார். கடந்த ஆண்டு சாம்பியன் கோப்பையை வென்று சிஎஸ்கே அணி நடப்பு சாம்பியனாக இருந்தாலும் பிளே ஆப் மற்றும் இறுதி சுற்று போட்டிகளில் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது இந்த 15-வது சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி கண்டுகொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் சென்னை அணியின் துணை கேப்டனாக பல ஆண்டுகள் செயல்பட்ட ரெய்னா மிகச் சிறப்பு வாய்ந்த வீரர் என்பதனால் அவரை சிஎஸ்கே அணி மீண்டும் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இப்படி ஏலத்தில் விற்க்கப்படாமல் போனது பெரிய வருத்தத்தை அளித்தது. இந்நிலையில் இந்த சீசனில் விற்க்கப்படாமல் போன ரெய்னா எப்படியாவது ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட போது தான் புதிதாக குஜராத் அணியால் வாங்கப்பட்ட ஜேசன் ராய் இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.
பயோ பபுளில் தன்னால் இருக்க முடியாது என்றும் தான் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக நிச்சயம் குஜராத் அணிக்காக ரெய்னா விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். ஆனால் இப்படி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் வேளையில் சுரேஷ் ரெய்னா தான் எதைப் பற்றியும் வாய் திறக்காமல் சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடுவதில் மும்முரமாக இருக்கிறார்.
இதையும் படிங்க : என்னுடைய கிரிக்கெட் கரியர் முடிவதற்குள் நான் செய்ய நினைக்கும் சாதனை இதுதான் – ஜடேஜா ஓபன்டாக்
குறிப்பாக கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற சிவராத்திரி நிகழ்வின் போது பிரார்த்தனை செய்யும் ஒரு புகைப்படமும், அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மாடுலேஷனையும் செய்து புகைப்படங்களாக இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதேவேளையில் குஜராத் அணியோ சுரேஷ் ரெய்னாவை அணியில் எடுப்பது பற்றி நாங்கள் யோசிக்கக்கூட இல்லை என்று தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளதால் நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.