
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. 2007 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா சில மகத்தான வெற்றிகளையும் நினைவுகளையும் ரசிகர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கடைசியாக நடைபெற்ற 2010 உலகக் கோப்பையில் சுரேஷ் ரெய்னாவின் சதத்தால் கிடைத்த வெற்றியை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது.
ஆம் மே 2ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு முரளி விஜய் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
துருவ நட்சத்திரமாக ரெய்னா:
அதே போல மறுபுறம் தடுமாறிய தினேஷ் கார்த்திக் 16 (17) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனால் 3வது இடத்தில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா தென்னாப்பிரிக்க பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். குறிப்பாக 2010 ஐபிஎல் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று சிஎஸ்கே முதல் கோப்பையை வெல்ல உதவிய அவர் அற்புதமான ஃபார்மில் இருந்தார்.
அதே வேகத்தில் இந்த போட்டியிலும் அசத்திய அவருடன் எதிர்புறம் சேர்ந்து விளையாடிய யுவராஜ் சிங் 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 37 (30) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து அட்டகாசமாகவும் அதிரடியாகவும் விளையாடிய ரெய்னா 9 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்க விட்டு 168.33 ஸ்ட்ரைக் ரேட்டில் சதமடித்து 101 (60) ரன்கள் விளாசி சதமடித்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை ரெய்னா படைத்தார்.
அத்துடன் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதமடித்த ஒரே இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் துருவ நட்சத்திரமாக சுரேஷ் ரெய்னா படைத்தார். ஏனெனில் 14 வருடங்கள் கடந்தும் வேறு எந்த இந்திய வீரரும் டி20 உலகக் கோப்பையில் சதமடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் யூசுப் பதான் 11, கேப்டன் தோனி 16* (6) ரன்கள் எடுத்ததால் இந்தியா 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதைத் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஜாம்பவான் ஜேக் காலிஸ் அதிரடியாக 73 (54)ரன்கள் குவித்து போராடினார். ஆனால் எதிர்ப்புறம் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் கேப்டன் கிரேம் ஸ்மித் 36, ஏபி டீ வில்லியர்ஸ் 31, அல்பி மோர்கெல் 12, மார்க் பவுச்சர் 4*, ஜேபி டுமினி 4* ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக யூசுப் பதான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையும் படிங்க: டி20 உ.கோ 2024 : இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளின் பலம், பலவீனம் என்ன? புள்ளி விவரத்தோடு ஒரு அலசல்
அது மட்டுமே அந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மறக்க முடியாத வெற்றியாகவும் அமைந்தது. ஏனெனில் அதை தவிர்த்து ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கையிடம் தோல்வியை சந்தித்த இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது.