ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2007க்குப்பின் கோப்பையை முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்தத் தொடரில் தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அணிகளில் ஒன்றாகவே இருக்கிறது. இம்முறை 2023, 2024 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் எஸ்ஏடி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அனுபவம் கொண்ட ஐடன் மார்க்கம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிடில் ஆர்டரில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடும் திறமையை கொண்ட அவருடைய தலைமையில் குவிண்டன் டீ காக், ரீசா ஹென்றிக்ஸ், ஹென்றிச் க்ளாஸென், டேவிட் மில்லர் ஆகியோர் அடித்து நொறுக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக க்ளாஸென், மில்லர் ஆகியோர் மிடில் ஆர்டரில் எதிரணிகளை துவம்சம் செய்து தனி ஒருவனாக வெற்றியை பெற்று கொடுக்கும் திறமையை கொண்டுள்ளனர்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா:
இவர்களுடன் ட்ரிஷன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன் ஆகிய இளம் வீரர்களும் தென்னாப்பிரிக்க பேட்டிங் துறைக்கு வலு சேர்கின்றனர். அதே போல தப்ரிஸ் சம்சி, கேசவ் மகாராஜ் ஆகியோர் தரமான ஸ்பின்னர்களாக பலம் சேர்க்கின்றனர். அத்துடன் காகிஸோ ரபாடா, மார்கோ யான்சென், போர்ட்சுன், ஆன்றிச் நோர்ட்ஜெ, பார்ட்மேன் ஆகியோர் வேகப்பந்து வீச்சுத் துறையில் விளையாடத் தேர்வாகியுள்ளனர்.
இதில் ரபாடாவை தவிர்த்து நோர்ட்ஜெ போன்ற இதர வேகப்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் ரன்களை வாரி வழங்குபவர்களாக இருப்பது பின்னடைவாகும். அதே போல மார்க்கோ யான்சனை தவிர்த்து அந்த அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டருக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. மேலும் ஸ்லோவான பிட்ச்சுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வெஸ்ட் இண்டீஸில் க்ளாஸென், ஸ்டப்ஸ் போன்ற ஒரு சிலரை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு எதிராக தடுமாறக்கூடியவர்கள் என்பது பின்னடைவாகும்.
இந்திய அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தரத்திலும் அனுபவத்திலும் உயர்ந்து நிற்கின்றனர். அதே போல ஜெய்ஸ்வால் அடித்து நொறுக்கக் கூடிய துவக்க வீரராகவும் சூரியகுமார் யாதவ் 360 டிகிரியிலும் விளையாடும் பேட்ஸ்மேனாக இருப்பது பலமாகும். ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகிய விக்கெட் கீப்பர்கள் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடி நல்ல ஃபார்மில் நம்பிக்கை தருகின்றனர்.
இருப்பினும் மேற்குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களில் யாருமே பகுதி நேர பவுலர்கள் இல்லை என்பது பின்னடைவாகும். ஆல் ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா சுமாரான ஃபார்மில் இருப்பதும் சிவம் துபே சமீபத்தில் பவுலிங் செய்யாததும் கவலைக்குரிய அம்சமாகும். அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் பும்ராவை தவிர்த்து சிராஜ், அர்ஷ்தீப் ஆகியோர் துல்லியமானவர்கள் கிடையாது என்பது பின்னடைவாகும்.
மற்ற படி அக்சர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால் ஆகியோர் அடங்கிய சுழல் பந்து வீச்சு கூட்டணி தரமானதாகவே இருக்கிறது. அதில் இருவர் ஆல் ரவுண்டர் என்பது சிறப்பம்சமாகும். மொத்தத்தில் சில பின்னடைவுகள் இருந்தாலும் அதை சமாளித்தது தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவதற்கு தேவையான தரமும் திறமையும் இந்திய அணியில் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துவது கேப்டன் ரோகித் சர்மா கையில் இருக்கிறது.
இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடருக்கான முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி – பங்கேற்பது சந்தேகம்
மறுபுறம் ஐசிசி தொடர்களில் முக்கிய நேரங்களில் சொதப்புவதில் கில்லாடியான தென்னாபிரிக்காவை சோக்கர் என்று வல்லுனர்கள் அழைப்பார்கள். அது இவ்விரு அணிகளில் தென்னாபிரிக்காவுக்கு மனதளவில் பலத்தை குறைக்கும் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 26 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 14, தென் ஆப்பிரிக்கா 11 போட்டிகளில் வென்றுள்ளன. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.