இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் நோக்கத்துடன் தயாராகி வருகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதில் ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே தொடர்ந்து அசத்தலாக விளையாடியதில்லை.
அதனால் கேஎல் ராகுல் தான் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போல ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்தும் திறமையை கொண்டுள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அதற்கு கொஞ்சம் பொறுப்புடன் விளையாடுவது மட்டும் அவசியம் என்று ரெய்னா கூறியுள்ளார்.
ரெய்னா அட்வைஸ்:
அந்த எண்ணத்துடன் 50 பந்துகளுக்கு மேல் நங்கூரமாக நின்று விளையாடினால் அவரால் பெரிய ரன்கள் குவித்து இந்திய அணிக்கு துருப்புச்சீட்டாக செயல்பட முடியும் என்றும் ரெய்னா ஆலோசனை தெரிவித்துள்ளார். எனவே அடுத்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் இவ்வாறு விளையாடுங்கள் என்று அவருக்கு ரெய்னா ஆலோசனை கூறியுள்ளார். இது பற்றி ரெய்னா பேசியது பின்வருமாறு.
“ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் நிறைய முன்னேற்றத்தை கண்டுள்ளார். அவருக்கு கொஞ்சம் பொறுப்பு அதிகம் தேவைப்படுகிறது. ஏனெனில் இது ஒருநாள் தொடர். அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடர் அவருக்கு நல்ல வாய்ப்பு. அதில் ஜெய்ஸ்வால் வாய்ப்பு பெறவில்லையெனில் ரிஷப் பண்ட் முக்கிய வேலையை பெறுவார்”
பொறுப்புடன் ஆடுங்க:
“4வது இடத்திலும் பாண்டியாவுக்கு முன்பாகவும் களமிறங்கி அவரால் அசத்த முடியும். 40 – 50 பந்துகளை எதிர்கொண்டு விளையாடினால் அவரால் போட்டியை ஃபினிஷிங் செய்ய முடியும். 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டால் என்னால் 80 – 100 ரன்களை அடிக்க முடியும். ஆனால் அதற்கு களத்தில் நேரத்தை செலவிடுவது முக்கியமென்று அவர் தமக்குஉன் தாமே சொல்லிக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: ஷமி அங்கிருந்து கம்பேக் கொடுப்பது இந்தியாவுக்கு பலம்.. யாருக்குமே நிலையான இடமில்லை.. அக்சர் படேல் பேட்டி
“ஒருவேளை அதில் சொதப்பினால் நிறைய பாதிப்பு ஏற்படும். மற்றபடி அந்த திறமையை கொண்டுள்ள அவர் இந்திய அணியின் துருப்புச் சீட்டு வீரராக செயல்படும் தன்மையைக் கொண்டுள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் கூட ஆஸ்திரேலிய மண்ணில் ரிஷப் பண்ட் 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் கொஞ்சம் நிதானத்துடன் விளையாடினால் அவரால் அசத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



