
கோலாகலமாக நிறைவு பெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக மே 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி 3வது கோப்பையை வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி நழுவ விட்டது.
அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் 51*, குர்பாஸ் 39 ரன்கள் விளாசி 10.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஹைதராபாத் கோட்டை விட்டது.
தொடர்நாயகன் நரேன்:
கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய மிட்சேல் ஸ்டார்க் ஆட்டநாயக்கன் விருதை வென்றார். அவரை விட இந்த வருடம் முழுவதும் அபாரமாக விளையாடிய சுனில் நரேன் பேட்டிங்கில் 488 ரன்களும் பந்து வீச்சில் 17 விக்கெட்களும் எடுத்து ஆல் ரவுண்டராக கொல்கத்தாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக கௌதம் கம்பீர் ஆலோசகராக வந்ததும் இந்த வருடம் ஓப்பனிங் வீரராக களமிறங்கும் வாய்ப்பை அவர் பெற்றார்.
அந்த வாய்ப்பில் அதிரடியாக விளையாடி ஒரு சதம் உட்பட 488 ரன்கள் குவித்த அவர் ஒரு கட்டத்தில் ஆரஞ்சு தொப்பிக்காக விராட் கோலியுடன் போட்டியிட்டார். அந்தளவுக்கு கொல்கத்தாவின் வெற்றியில் ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் 2024 தொடரின் தொடர்நாயகன் விருதை வென்றார். இத்துடன் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் 24 விக்கெட்டுகளை எடுத்து கொல்கத்தா முதல் கோப்பையை முத்தமிடுவதற்கு முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார்.
மேலும் 2018 சீசனில் 357 ரன்கள் அடித்த அவர் 17 விக்கெட்டுகளை எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார். அந்த வகையில் ஏற்கனவே 2 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இதையும் சேர்த்து மொத்தம் 3 ஐபிஎல் தொடர் நாயகன் (2012, 2018, 2014*) விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொடர்நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை சுனில் நரேன் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 741 ரன்ஸ்.. சச்சின் உட்பட வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத வரலாற்று சாதனையை நிகழ்த்திய கிங் கோலி
இதற்கு முன் 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஷேன் வாட்சன் (2008, 2013) மற்றும் ஆண்ட்ரே ரசல் (2015, 2019) ஆகியோர் தலா 2 தொடர் நாயகன் விருதுகளை வென்றதே முந்தைய சாதனையாகும். அப்படிப்பட்ட அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அடுத்ததாக நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை. அதனால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.