நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அவர்களின் சுமாரான ஆட்டத்திற்கு உள்ளூர் துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடாதது முக்கிய காரணமாக அமைந்தது.
சொல்லப்போனால் கௌதம் கம்பீர் அறிவுறுத்தலில் துலீப் கோப்பையில் அவர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நட்சத்திர வீரர்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் விடுப்பு கொடுக்கப்படுவதாக பிசிசிஐ ஜெய் ஷா பின்னர் அறிவித்தார். இந்நிலையில் அனைத்திற்கும் பிசிசிஐ மீது பழி போடக்கூடாது என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு சுனில் ஜோசி தெரிவித்துள்ளார்.
பழியை போடாதீங்க:
மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் நலனுக்காக தாமாக துலீப் கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிசிசிஐ மீது அனைத்தையும் போடுவதை நிறுத்துங்கள். அது தனி நபர்களின் பொறுப்பிலும் இருக்கிறது. அவர்கள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடப் போகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்”
“அது சுழல் அல்லது வேகத்துக்கு சாதகமான மைதானத்தில் நடக்குமா என்பது உங்களுக்கு தெரியாது. எனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடிய நீங்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி டெஸ்ட் தொடருக்கு தயாராக இருந்திருக்க வேண்டும். பிசிசிஐ மீது அனைத்து பழியையும் போட முடியாது. வீரர்களும் பொறுப்புடன் முன்னே வந்து பாஸ் நாங்கள் துலீப், ரஞ்சிக் கோப்பையில் விளையாடுகிறோம் என்று சொல்ல வேண்டும்”
உள்ளூர் போட்டிகள்:
“நம்முடைய டாப் பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக ரன்கள் எடுப்பதில் முன்னேறுவதற்கு என்ன வழி இருக்கிறது? அவர்கள் உள்ளூரில் சென்று சுழல் பந்துகளை அதிகமாக எதிர்கொள்ள வேண்டும். ஏன் அவர்களால் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு செல்ல முடியாதா? இவர்கள் அனைவருமே உள்ளூரில் விளையாடிய பின்பு தான் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர்”
இதையும் படிங்க: வயதானவர்களால் ஜெயிப்பது கஷ்டம்.. அந்த வீரர்கள் இப்போவும் இந்தியாவை காப்பாத்துவாங்க.. கில்கிறிஸ்ட், ஓ’கீபி
“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரவிருக்கும் சூழ்நிலையில் நம்முடைய டாப் 6 பேட்ஸ்மேன்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாட முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும். இங்கே இந்திய அணியை விடவும் கிரிக்கெட்டை விடவும் யாரும் பெரியது கிடையாது. அனைவரும் தங்களுடைய கேரியரில் மேடு பள்ளங்களை சந்திப்பார்கள்” என்று கூறினார்.