நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அந்த தொடரில் இந்தியா குறைந்தது 4 வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணிக்கு இம்முறை விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா, ஜடேஜா போன்ற வயதான வீரர்கள் பின்னடைவை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ஆனால் வயதையும் தாண்டி அசத்தும் திறமை அவர்களிடம் இருப்பதாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இந்தியா கம்பேக் கொடுக்குமா:
“நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி இந்திய அணி வீரர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அந்த தோல்வியால் ஆஸ்திரேலியாவில் அவர்களை எளிதாக வீழ்த்த முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடைசியாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இப்படி ஒயிட்வாஷ் தோல்வியை எப்போது சந்தித்தார்கள் என்பது எனக்கு நினைவில்லை”
“அது அவர்களுக்குள் கேள்வியையும் அழுத்தத்தையும் உண்டாக்கும். கிரிக்கெட்டில் பெரிய ஆர்வம் கொண்ட இந்தியா போன்ற நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் மீது அந்த அழுத்தம் பெரிய பாரமாக இருக்கும். அந்த பாரத்திற்கு மத்தியில் சில வயதான வீரர்கள் தங்கள் மீது சந்தேகத்துடன் விளையாடக் கூடும். அதே சமயம் இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்”
இந்தியா வெல்லும்:
“எனவே அவர்கள் எப்படி இந்த தோல்வியிலிருந்து மீண்டும் சவாலுக்கு வருகிறார்கள் என்பதை பார்ப்பது சிறப்பாக இருக்கும்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கேரி ஓ’கீபி பேசியது பின்வருமாறு. “இப்போதும் இந்தியாவிடம் துருப்புச்சீட்டு வீரர்கள் உள்ளனர். அதனாலேயே அவர்கள் ஆபத்தானவர்கள். பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் துருப்பச்சீட்டு வீரர்கள்”
இதையும் படிங்க: ஆஸியில் அடிக்கலன்னா.. 2025இல் அந்த தொடருடன் ரோஹித், கோலியின் கேரியர் முடியும்.. கவாஸ்கர் வெளிப்படை
“சுப்மன் கில் 3வது இடத்தில் தன்னை முன்னேற்றி வருவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. சுழலுக்கு சாதகமாக சூழ்நிலை இருந்தால் அங்கே அசத்துவதற்கு அஸ்வின், ஜடேஜா உள்ளனர். ஆனால் ரோஹித் சர்மா, விராட் கோலி சுமாரான பார்மில் வருகிறார்கள். அதுவும் முக்கியம். இந்திய அணி மீது ஆஸ்திரேலியா கடுமையாக செல்லும். ஆனால் விராட் கோலி அவர்களுக்கு நீண்ட வருடமாக கவலையை கொடுத்தவர். எனவே விராட் கோலி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினால் இந்தியா வெல்வதற்கும் வாய்ப்புள்ளது” என்று கூறினார்.



