ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் வழக்கம்போல நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். அதில் உச்சபட்சமாக ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் அதிரடி வேகப்பந்து வீச்சாளரும் உம்ரான் மாலிக் ஒவ்வொரு போட்டியிலும் தனது அசுர வேகப்பந்துகளால் எதிரணிகளை திணறடித்து பல ஜாம்பவான்களையும் தயக்கமின்றி பாராட்ட வைத்துள்ளார்.

கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான போதே 150 கி.மீ வேகப்பந்துகளை வீசி விராட் கோலி உட்பட பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த அவர் இந்த வருடம் அதைவிட அற்புதமாக செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் ஆரம்ப கட்டத்தில் வேகத்தை மட்டும் பிரயோகித்த அவர் அதற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கி வந்த நிலையில் சமீபத்திய போட்டிகளில் வேகத்திற்கு ஈடான விவேகத்தையும் பயன்படுத்தி குறைந்த ரன்களை கொடுத்து அதிக விக்கெட்டுகளை எடுக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக குஜராத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 196 என்ற இலக்கை துரத்திய அந்த அணி 69/0 என நல்ல நிலைமையில் இருந்தது.
அசத்தும் உம்ரான்:
அப்போது முதல் முறையாக 7-வது ஓவரை வீச வந்த அவர் சுப்மன் கில்லை 22 (24) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 10 (6) ரன்களில் எல்பிடபிள்யூ செய்து 68 (38) ரன்கள் எடுத்து போராடிக்கொண்டிருந்த சஹாவையும் கிளீன் போல்டாக்கினார். அதைத்தொடர்ந்து 15-வது ஓவரை வீசிய அவர் மிரட்டலான மில்லரை 17 ரன்களிலும் அபினவ் மனோஹரை கிளீன் போல்டாக்கி கோல்டன் டக் அவுட் செய்து போட்டியை முழுமையாக ஹைதராபாத் பக்கம் திருப்பினார்.

இருப்பினும் கடைசியில் அவரின் அற்புதமான பந்துவீச்சை வீணடிக்கும் வகையில் இதர ஹைதராபாத் பவுலர்கள் சொதப்பியதை பயன்படுத்திய ரசித் கான் 31* (11), ராகுல் திவாடியா 40* (21) என அதிரடியான ரன்களையும் சிக்ஸர்களையும் அடித்து குஜராத்திற்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் ஹைதராபாத் தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் வெற்றிக்காக 25 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த உம்ரான் மாலிக் பவுலிங்கை பார்த்த ஐபிஎல் நிர்வாகம் வியந்து போய் ஆட்டநாயகன் விருதை அவரின் திறமைக்கு பரிசளித்தது.
இங்கிலாந்துக்கு அனுப்புங்க:
இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் தன்னை தானே மெருகேறி வரும் உம்ரான் மாலிக் இந்திய மண்ணிலேயே இப்படி மிரட்டுகிறார் என்றால் வேகத்திற்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கண்டிப்பாக எதிரணிகளை அச்சுறுத்துவார் என்பதால் அங்கு வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது.

ஆனால் அதற்கு முன்பாக வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் உம்ரான் மாலிக்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருக்கான அடுத்தவேளை இந்திய அணியில் உள்ளது என நினைக்கிறேன்.
முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் போன்றோர் இருப்பதால் இந்தியாவின் விளையாடும் 11 பேர் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஆனால் அது போன்ற தரமான பவுலர்களுடன் பயணித்து ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களுடன் இருக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். இங்கிலாந்துக்கு இந்தியா சென்று ஒரு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் போது அவரையும் அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறினார்.

மூத்த வீரர்கள் ஏற்கனவே அணியில் இருப்பதால் நேரடியாக 11 பேர் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக்கூறும் சுனில் கவாஸ்கர் இருந்தாலும் கூட இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு பெஞ்சிலாவது வாய்ப்பளிக்க வேண்டும் எனக்கேட்டு கொண்டுள்ளார். ஏனெனில் பும்ரா, சமி போன்ற பவுலர்களுடன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற தரமான வீரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தால் அவரின் திறமை மேலும் பட்டை தீட்டப்படுவதற்கு வாய்ப்புகள் அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பரிதாபம் – மும்பையின் கடைசி வெற்றிக்கு பின் கிரிக்கெட்டில் நிகழ்ந்த 6 மாற்றங்கள் – லிஸ்ட் இதோ
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவருக்கு தாராளமாக வாய்ப்பளிக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். அந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு முன்பாக இங்கிலாந்துக்கான டிக்கெட்டையும் சேர்த்து உம்ரான் மாலிக்க்கு போடுமாறு இந்திய அணி நிர்வாகத்திற்கு தற்போது அவர் புதிய கோரிக்கையை வைத்துள்ளார்.



