ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது. அந்தத் தொடரில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் 2000 சாம்பியன்ஸ் டிராபி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களின் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து கோப்பையை வென்றது.
எனவே இம்முறை நியூசிலாந்து அணியை இந்தியா சாய்க்குமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது. இதற்கிடையே இந்திய அணியில் விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சதத்தை அடித்தாலும் இத்தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. சுயநலமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுவதால் அவர் இதுவரை பெரிய ரன்கள் குவிக்கவில்லை.
25 ரன்கள் போதுமா?
ஆனால் அது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் சுயநலமில்லாமல் இப்படி 25 ரன்கள் மட்டும் அடித்தால் போதுமா? என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே ஃபைனலில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்புடன் 25 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “இந்த அணுகுமுறையை கடந்த 2 வருடங்களாக ரோஹித் பின்பற்றி வருகிறார். 2023 உலகக் கோப்பையில் கண்டறிந்த அந்த சூத்திரத்தில் இன்னும் ரோஹித் நிற்கிறார். அதைப் பின்பற்றி அவர் சில வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஆனால் அது அவரது திறமைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய அளவு இல்லை”
கவாஸ்கர் அட்வைஸ்:
“இந்த விளையாட்டில் பல வீரர்களிடம் இல்லாத நிறைய ஷாட்டுகளை கொண்டுள்ள ரோஹித் திறமையான வீரர். அது போன்ற சூழ்நிலையில் 25 ஓவர்கள் வரை ரோகித் விளையாடி இந்தியா 180 – 200 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆனால் அப்போது விக்கெட்டுகள் கையில் இருக்கும் என்பதால் அங்கிருந்து இந்தியாவால் 350+ ரன்கள் அடிக்க முடியும். நீங்கள் அதிரடியாக விளையாடுவது ஒரு விஷயம்”
இதையும் படிங்க: இது மட்டும் கிடைச்சா போதும்.. மறுபடியும் துபாய்க்கு போய் இந்தியாவை ஃபைனலில் சாய்ப்போம்.. சான்ட்னர் பேட்டி
“அதே சமயம் 25 – 30 ஓவர்கள் வரை பேட்டிங் செய்யும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குவது விவேகமாக இருக்கும். அப்படி செய்தால் எதிரணியிடமிருந்து அவர் ஆட்டத்தை எடுத்து விடுவார். அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நீங்கள் 25 – 30 ரன்கள் மட்டும் அடித்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களா? எனவே அணிக்காக நீங்கள் வெறும் 7 – 9 ஓவர்கள் வரை பேட்டிங் செய்வதை விட 25 ஓவர்கள் வரை விளையாடி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நான் சொல்வேன்” எனக் கூறினார்.



