இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. அந்தத் தோல்விக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தனர்.
அதனால் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாகவே விடை பெற்ற ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குப்பையான காரணம்:
குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தகுதியானவர் என்றாலும் அடிக்கடி காயத்தை சந்திக்கக் கூடியவராக இருக்கிறார். எனவே அவருக்கு பதில் சுப்மன் கில்லை தேர்வுக்குழு புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கணிக்க முடியாத வருங்காலத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை சந்தித்து விடுவார் என்ற குப்பையான காரணத்தை வைத்து சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க கூடாது என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்சமயத்தில் இந்திய அணியை வழி நடத்துவதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா தான் அவசியமானவர் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “பணிச்சுமை பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்பது ஜஸ்ப்ரித் பும்ராவை விட வேறு யாருக்கும் தெரியும். நீங்கள் வேறு ஒருவரை கேப்டனாக நியமித்தால் அவர் எப்போதும் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் எக்ஸ்ட்ரா ஓவரை வாங்க விரும்புவார்கள்”
பும்ரா தான் வேண்டும்:
“உங்களுடைய நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அவருக்கு எப்போது இடைவெளி எடுக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். எனவே என்னைப் பொறுத்த வரை அவர்தான் நம்முடைய கேப்டனாக இருக்க வேண்டும். பணிச்சுமை, காயம் போன்ற விஷயங்கள் அவரை சுற்றி இருப்பது எனக்கும் தெரியும். முதலில் அவருக்கு வாய்ப்பை கொடுங்கள். அப்போது தான் தாம் எவ்வளவு ஓவர்கள் பௌலிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும்”
இதையும் படிங்க: இந்திய ஜெர்சியில் ரோஹித், கோலி ஒன்னா விளையாடுறத இனி எப்போ பாக்க முடியும்? – விவரம் இதோ
“இங்கிலாந்து தொடரில் முதல் போட்டி முடிந்த பின் 8 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அதுவே 2 போட்டிகளுக்கு இடையே புத்துணர்ச்சி பெறுவதற்கு போதுமான நேரமாகும். அதன் பின் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகிறது. அதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவரால் விளையாட முடியும். 4வது போட்டிக்கு முன் மீண்டும் இடைவெளி இருக்கிறது. எனவே அந்த நேரங்களை பயன்படுத்தி எவ்வளவு அதிகமாக பௌலிங் செய்ய முடியும் என்பது பும்ராவுக்கு மட்டுமே தெரியும்” எனக் கூறினார்.



