இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே கடந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர்கள் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தனர்.
ரோஹித், கோலியை எப்போது ஒன்றாக பார்க்கலாம் ? :
தற்போது ஐபிஎல் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்த அடுத்த சில தினங்களிலேயே விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இப்படி இவர்கள் இருவரது அடுத்தடுத்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவர்கள் இருவரும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வேளையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெற்று விட்டதால் இனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இருவரும் இணைந்து விளையாட முடியும்.
இந்நிலையில் அடுத்ததாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரையும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் எப்போது காணலாம்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் இந்திய அணிக்கு அடுத்த ஆகஸ்ட் மாதம் தான் வங்கதேச சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அட்டவணை படுத்தப்பட்டுள்ளது.
எனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை இந்திய ஜெர்சியில் இணைந்து பார்க்க ரசிகர்கள் குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் 2027-ஆம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலககோப்பை தொடரில் விளையாடி அந்த கோப்பையையும் கைப்பற்றிய பின்னரே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்று நம்பலாம்.
இதையும் படிங்க : அதை செய்ய முடியலன்னு நினைக்கிற நாளில்.. ஒன்டே கிரிக்கெட்டிலும் ஓய்வாகி போய்ருவேன்.. ரோஹித் உருக்கம்
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் ரோஹித் சர்மா விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



