கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது.
சொல்லப்போனால் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீண்டும் அதே போன்ற பிட்ச்சை அமைத்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. ஏனெனில் கொல்கத்தாவில் தாங்கள் தான் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
இந்த ஆப்பு தேவையா:
இந்நிலையில் சுழலுக்கு சாதகமாக பிட்ச்களை அமைப்பது கடைசியில் இந்தியாவுக்கே ஆப்பாக முடிவதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே பிட்ச் தயாரிப்பாளரை சுதந்திரமாக விட்டாலே இந்தியாவில் தரமான பிட்ச்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இனிமேலாவது பிட்ச் தயாரிப்பாளர் வேலையில் கௌதம் கம்பீர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.
இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு குறிப்பிட்ட பிட்ச் தான் வேண்டுமென்று எந்த ஐபிஎல் அணி நிர்வாகமும் பிட்ச் தயாரிப்பாளரிடம் கேட்க மாட்டார்கள். பிட்ச் தயாரிப்பாளர் சுதந்திரமாக வேலை செய்வார்கள். ஒருவேளை பிட்ச் தயாரிப்பாளர் தங்கள் மைதானத்தை சொந்த வீடாகக் கொண்ட ஐபிஎல் அணியின் ரசிகராக இருந்தால் மட்டுமே அவர்களுடைய பலத்துக்கு உகந்த பிட்ச்சை உருவாக்குவார்கள்”
கவாஸ்கர் சாடல்:
“ஆனால் அது கூட பிட்ச் தயாரிப்பாளரின் முடிவாகவே இருக்கும். எனவே பிட்ச் தயாரிப்பாளரை சுதந்திரமாக தனியாக வேலை செய்ய விடுவது சிறந்த முடிவாகும். ஏனெனில் மற்றவர்களைக் காட்டிலும் அவருடைய வேலைப் பற்றி அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். அவரிடம் போய் நீங்கள் குறிப்பிட்ட பிட்ச்சை தயாரிக்குமாறு கேட்டால் அதுவே உங்களுக்கு ஆப்பாக மாறலாம்”
இதையும் படிங்க: இப்படி பண்ணா இந்தியா சொந்த ஊரில் கூட ஜெய்க்க முடியாது.. கோலி ரூட்டை பாருங்க.. கம்பீருக்கு ஹாடின் அட்வைஸ்
“அதனால் அதை நீங்கள் தவிர்த்து விட வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 22ஆம் தேதி இரண்டாவது போட்டி கௌகாத்தியில் துவங்குகிறது. அந்தப் போட்டியிலாவது கௌதம் கம்பீர் பிட்ச்சில் கை வைக்காமல் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.



