
நூற்றாண்டை கடந்து நடைபெற்று வரும் கிரிக்கெட்டில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப பல விதிமுறைகள் கொண்டுவட்டப்பட்டுள்ளன. இருப்பினும் சமீப காலங்களில் அந்த புதிய விதிமுறைகள் பவுலர்களுக்கு பாதகமாகவும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் இருப்பதாக விமர்சிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக டி20 கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள், நோபால் போட்டால் ஃப்ரீ ஹிட், மைதானத்தின் பவுண்டரி அளவு குறைக்கப்பட்டது போன்றவற்றை சொல்லலாம்.
அதை பயன்படுத்தி பவுலர்களை காட்டுத்தனமாக அடிக்கும் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து வருகின்றனர். அதனால் நிறைய விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைப்பது வழக்கமாகும். இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அடிக்கடி பவுலர்கள் ஓவர்களுக்கு இடையேயும் பவுண்டரி இல்லைக்கும் சென்று தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐசிசிக்கு கோரிக்கை:
குறிப்பாக ஃபீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கடி பவுலர்கள் பவுண்டரி எல்லைக்கு சென்று தண்ணீர் குடிப்பதாக அவர் கூறியுள்ளார். அப்படி பவுண்டரி எல்லைக்கு அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு? என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தண்ணீர் இடைவெளி வரை காத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் மனிதர்கள் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே ரிசர்வ் வீரர்கள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஓவர்களுக்கு இடையே விதிமுறையை மீறி சென்று பவுலர்களுக்கு தண்ணீர் கொடுப்பதை ஐசிசி நிறுத்த வேண்டும் என்றும் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் ஓவரை முடித்து விட்டு ஃபீல்டிங் செய்ய செல்லும் போது பவுண்டரி எல்லையில் புத்துணர்ச்சியூட்டும் பானத்தை பெறுவது அதிகரித்து விட்டது”
“ஆனால் அதை அதிகாரிகள் பார்த்துக்கொண்டு கண்ணை மூடி கொண்டுள்ளனர். பவுலர்கள் 6 பந்துகள் வீசி முடித்ததும் பானத்தை குடிக்க சென்றால் பின்னர் எதற்காக தண்ணீர் இடைவேளை விட வேண்டும்? இந்த நேரத்தில் ஓவர் முடிந்த பின்போ அல்லது ஒரு ஓவரில் 4 டபுள் ரன்கள் ஓடிய பின்போ பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் குடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்”
இதையும் படிங்க: 15 வருஷத்துக்கு முன்னாடி கோலி பேசுனதை கேட்டு நொந்து போய்ட்டேன்.. இப்போ வியப்பா இருக்கு.. உத்தப்பா பேட்டி
“கிரிக்கெட் என்பது ஸ்டாமினாவை பொறுத்த விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் ஒவ்வொரு மணி நேரமும் விளையாடிய பின் எதிரணி கேப்டன் மற்றும் நடுவரின் அனுமதியுடன் மட்டுமே பவுலர்கள் பானங்கள் அருந்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட பழைய நாட்களை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதே போல ரிசர்வ் வீரர்கள் ஓவர்களுக்கு இடையே களத்திற்குள் சென்று தங்களுடைய வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்காதவாறு நடுவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.