
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டமான இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாய் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியரான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. இந்த போட்டியின் போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பாக சவுத் ஷகில் 62 ரன்களையும், ரிஸ்வான் 46 ரன்களையும் குவித்தனர். பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 42.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 244 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 111 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அவரது ஆட்டமே பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது விராட் கோலி செய்த ஒரு தவறை பாகிஸ்தான் வீரர்கள் சுட்டிக்காட்டி இருந்தால் 41 ரன்களில் அவுட்டாகி இருப்பார் என்றும் அதனை பாகிஸ்தான் வீரர்கள் செய்ய தவறிவிட்டனர் என்றும் கவாஸ்கர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி 21-வது ஓவரின் போது பீல்டரின் அனுமதி இல்லாமல் பந்தினை தனது கையால் தடுத்து நிறுத்தினார்.
ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அது குறித்து மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. ஒருவேளை பாகிஸ்தான் வீரர்கள் மேல்முறையீடு செய்திருந்தால் நிச்சயம் கோலி அவுட்டாகி இருப்பார். அந்த கட்டத்தில் யாரும் அதை செய்யாததால் கோலி அதிர்ஷ்டவசத்தால் தப்பியதாக கவாஸ்கர் கூறியுள்ளார். அவர் கூறியது போன்று போட்டியின் 21-வது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தபோது விராட் கோலி பீல்டர் அடித்த த்ரோவை ஸ்டம்பை தாண்டி வந்ததும் கையால் தடுத்து நிறுத்தினார்.
இதையும் படிங்க : பாகிஸ்தானை துவைத்து எடுத்ததன் மூலம் மேலும் ஒரு சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி – விவரம் இதோ
ஐசிசி விதிப்படி இப்படி ஒரு பேட்ஸ்மேன் பேட்டாலோ அல்லது கையாலோ பந்தை தடுத்து நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் உடனே ஆட்டமிழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார். ஆனால் நேற்று கோலிக்கு எதிராக யாரும் அப்பீல் செய்யவில்லை என்பதாலேயே அதிலிருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.