சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது மிக பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் நிச்சயம் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பேட்ஸ்மேன்களை எச்சரித்த சுனில் கவாஸ்கர் :
இந்நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி அமெரிக்கா அணியை எளிதில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மிகப்பெரிய போராட்டத்திற்கு மத்தியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றது என்று கூறலாம்.
அந்த அளவிற்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெரிய சரிவை ஏற்படுத்தினர். ஆனால் கேப்டன் சூர்யாவின் ஆட்டம் காரணமாக இந்திய அணி இந்த போட்டியின் தோல்வியிலிருந்து தப்பியது. இந்நிலையில் அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸமேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறியது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய அணியை எச்சரிக்கும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ஆட முயற்சி செய்து 8 பேட்ஸ்மேன்களில் 4 பேர் வெளியேறினால் நீங்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இதையும் படிங்க : கவுதம் கம்பீர் கொடுத்த அந்த வார்த்தை தான் என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – சூரியகுமார் யாதவ்
நல்ல திறமையும் அனுபவம் வாய்ந்த அணிகளிடம் இதேபோன்ற சரிவை சந்தித்தால் நிச்சயம் தோல்வியிலிருந்து தப்பிக்க முடியாது. பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். உலக கோப்பை போன்ற ஒரு மிகப்பெரிய தொடரில் பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



