இளம் இந்திய கிரிக்கெட் வீரர் பிரிதிவி ஷா தற்போது ரஞ்சிக்கோப்பை அணியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 2018 அண்டர் 19 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த அவரை சச்சின், சேவாக், லாரா கலந்த கலவை என்று அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.
அந்தளவுக்கு அசத்திய பிரிதிவி ஷா நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள தவறினார். குறிப்பாக வெளிநாடுகளில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஸ்விங் பந்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் கிளீன் போல்டானார். அப்படி சுமாராக செயல்பட்டதால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
35% கொழுப்பு பிரச்சனையா:
அதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியிலும் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வந்தார். ஆனால் அந்த வாய்ப்பிலும் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் பிரிதிவி ஷா மும்பை அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். குறிப்பாக பேட்டிங்கை தாண்டி ஃபிட்னஸ் மோசமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள ஆதரவு பின்வருமாறு. “ரஞ்சிக் கோப்பையில் நடப்பு சாம்பியன் மும்பை அணி திரிபுரா அணிக்கு எதிரான தங்களுடைய போட்டியிலிருந்து பிரிதிவி ஷா நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ரஞ்சி அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு கலவையான காரணங்கள் செய்திகளாக காணப்படுகின்றன”
கவாஸ்கர் ஆதரவு:
“ஒருவேளை அது அணுகுமுறை, நன்னடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தால் அதை புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் அவருடைய எடை காரணமாக நீக்கப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஏனெனில் அவரின் உடலில் 35% கொழுப்பு இருப்பதாலேயே நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரிந்துரைக்கிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் ஆட்டத்தை நாம் பார்த்தோம்”
இதையும் படிங்க: தோல்வியை பாக்குறவங்க இந்திய அணியில் ரோஹித் செய்துள்ள தொடர்பையும் பாருங்க.. ஷிகர் தவான் ஆதரவு
“அவருடைய உடல் எடை மற்றும் வடிவம் பற்றி பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் 150 ரன்கள் அடித்த அவர் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு ஃபிட்னஸ், மெலிதான இடுப்பு மட்டுமே தேவையில்லை என்பதை காண்பித்தார். எனவே ஒரு வீரர் 150+ ரன்கள் அடித்தால் அல்லது ஒரு நாளில் 20 ஓவர் வீசினால் அதையே நாம் ஃபிட்னஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பிரிதிவி ஷா போன்ற உடலமைப்பை கொண்டுள்ள எத்தனை பேர் 379 ரன்கள் அடித்துள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.



