
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடர் போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. முன்னதாக அந்தத் தொடரில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியில் சதமடித்த விராட் கோலி கூட மீண்டும் தடுமாற்றமாக விளையாடி வருகிறார்.
அதே போல நிறைய அனுபவத்தைக் கொண்ட கேப்டன் ரோகித் சர்மாவும் திண்டாடும் நிலையில் கேஎல் ராகுல் மட்டும் அபாரமாக விளையாடி வருகிறார் என்பதே நிதர்சனமாகும். ஏனெனில் முதல் போட்டியிலேயே 77 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றிய அவர் இரண்டாவது போட்டியிலும் 33 ரன்கள் குவித்து நன்றாகவே விளையாடினார். அதை விட காபாவில் நடைபெறும் 3வது போட்டியிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக விளையாடினர்.
ஆனால் அதே போட்டியில் மீண்டும் துவக்க வீரராக களமிறங்கி புதிய பந்தை லாவகமாக எதிர்கொண்ட ராகுல் 84 ரன்கள் விளாசி குறைந்தபட்சம் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க உதவினார். இத்தனைக்கும் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் தோல்வியை சந்திக்க காரணமான அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் தற்போது சவாலான ஆஸ்திரேலியாவில் தம்முடைய திறமையை காண்பிக்கும் ராகுல் மீண்டும் பாராட்டுகளை பெறுகிறார்.
இந்நிலையில் இந்தத் தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் ராகுல் துவக்க வீரராக விளையாட வேண்டுமென சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் தொடர்ந்து அவுட்டாகி வருகிறார். அதை தவிர்க்க அவருடைய முதல் ஓவரை ஜெய்ஸ்வாலுக்கு பதில் ராகுல் எதிர்கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த விவாதம் முடிந்துள்ளது. இந்த 3 போட்டிகளிலும் விளையாடிய விதத்தை வைத்து ராகுல் தான் துவக்க வீரராக விளையாட வேண்டும். ரோகித் சர்மா இந்தத் தொடர் மட்டுமின்றி கடந்த 4 – 5 போட்டிகளாகவே நல்ல ஃபார்மில் இல்லை. எனவே நல்ல பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன் துவக்க வீரராக விளையாடுவதே சரியாகும்”
இதையும் படிங்க: ரோஹித், கோலியே திணறும் ஆஸியில் அசத்துவது எப்படி? தனது ஸ்மார்ட் பேட்டிங் திட்டம் பற்றி.. ராகுல் பேட்டி
“போட்டியின் முதல் பந்தை ராகுல் எதிர்கொள்வதை பார்க்க வேண்டும் என்பதே நான் விரும்பும் ஒரே மாற்றமாகும். அது ஜெய்ஸ்வால் செட்டிலாக நேரத்தை கொடுக்கும். ஏனெனில் அவர் கொஞ்சம் அவசரமாக விளையாடுவது போல் தெரிகிறது. ஆரம்பத்திலேயே பவுண்டரி அடிக்கும் அவர் பின்னர் அவுட்டாகி விடுகிறார். எனவே அவர் எதிர்ப்புறம் இருந்து செட்டிலாவதற்கு கொஞ்சம் நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.