ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா வென்றது. அடுத்ததாக ரோகித் சர்மா தலைமையில் அடிலெய்ட் நகரில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. டிசம்பர் 6ஆம் தேதி பகல் இரவாக துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 6 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 337 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிராஜ், பும்ரா தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தேவையற்ற ஸ்லெட்ஜ்:
பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 128-5 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி, கேப்டன் ரோஹித் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் களத்தில் ரிஷப் பண்ட் 28*, நிதிஷ் ரெட்டி 15* ரன்கள் எடுத்துள்ளார்கள். முன்னதாக இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் இந்திய பவுலர்களை மீண்டும் ஒருமுறை அட்டகாசமாக எதிர்கொண்டு தம்முடைய சொந்த ஊரான அடிலெய்டில் சதத்தை அடித்தார்.
குறிப்பாக 111 பந்தில் 100 ரன் அடித்த அவர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற தனது சொந்த சாதனையை உடைத்து புதிய உலக சாதனையை படைத்தார். ஆனால் அவரை அவுட்டாக்கிய போது வெளியே செல்லுங்கள் என்ற வகையில் சிராஜ் கோபமாக வழியனுப்பினார். அதற்கு ஹெட்டும் சில வார்த்தைகள் சொன்னார். இறுதியில் தங்களுடைய உள்ளூர் ஹீரோவை அப்படி வழியனுப்பிய சிராஜுக்கு எதிராக அடிலெய்ட் ரசிகர்கள் கூச்சலிட்டார்கள்.
கவாஸ்கர் விளாசல்:
இந்நிலையில் அதற்காக சிராஜை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “என்னைக் கேட்டால் ஹெட் 4, 5 ரன்கள் அடிக்கவில்லை. 140 ரன்கள் அடித்த அவரை இப்படி அனுப்பியது முற்றிலும் தேவையற்றது. அதற்காக ரசிகர்களிடம் சிராஜ் இப்படி திட்டு வாங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஹெட் உள்ளூர் ஹீரோ”
இதையும் படிங்க: இதை சொன்னதுக்கு சிராஜ் இப்படி செஞ்சது ஏமாற்றம்.. இந்தியாவை 140 ரன்ஸ் அடித்த திட்டம் இது தான்.. .. ஹெட் பேட்டி
“ஒருவேளை தங்களின் உள்ளூர் ஹீரோவை சதமடித்ததற்காக பாராட்டியிருந்தால் அதே ரசிகர்கள் சிராஜையும் ஹீரோவாக கொண்டாடியிருப்பார்கள். ஆனால் இப்படி வழினுப்பியதால் சிராஜ் வில்லனாகி விட்டார். ஒருவேளை ஹெட் 1, 2 ரன்னில் அவுட்டாகி சென்றிருந்தால் நீங்கள் இப்படி அனுப்பியது வித்தியாசமாக இருந்திருக்கும்” என்று கூறினார். இருப்பினும் போட்டியின் பரபரப்பில் அப்படி செய்த சிராஜ் சதமடித்த ஹெட்டிடம் கொஞ்சம் பணிவுடன் நடந்திருக்க வேண்டும் என்று மேத்தியூ ஹைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.



