மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 சாய்த்தார். பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் 3, விராட் கோலி 36, ராகுல் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
அபாரமாக விளையாடி போராடிய ஜெய்ஸ்வாலும் 82 ரன்களில் அவுட்டானதால் 2வது நாள் முடிவில் 164-5 என இந்தியா தடுமாறியது. அந்த சூழ்நிலையில் இன்று துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாடி இந்தியாவை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கவாஸ்கர் விளாசல்:
ஆனால் ஸ்காட் போலண்ட் வீசிய 55வது ஓவரின் 5வது பந்தை தேவையின்றி ஏபி டீ வில்லியர்ஸ் போல அடித்த அவர் தேர்ட்மேன் திசையில் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தார். அதை நேரலையில் பார்த்த ஹர்சா போக்லே “ஸ்காட் போலண்டுக்கு விக்கெட்டை கொடுப்பதற்காகவே ரிஷப் பண்ட் அப்படி விளையாடியது போல் இருக்கிறது” என விமர்சித்தார். ஆனால் அவரது அருகில் இருந்தால் சுனில் கவாஸ்கர் கோபத்துடன் விமர்சித்தது பின்வருமாறு.
“முட்டாள் முட்டாள் முட்டாள். இவர் இங்கிருந்து இந்திய அணியின் உடைமாற்றும் அறைக்கு செல்லக்கூடாது. மற்றொரு அணியின் உடைமாற்றும் அறைக்குச் செல்ல வேண்டும். அங்கே 2 ஃபீல்டர்கள் இருக்கும் போதும் நீங்கள் இப்படி அடிக்க செல்கிறீர்கள். இத்தனைக்கும் நீங்கள் கடந்த பந்தில் தப்பினீர்கள். ஆனால் அடுத்த பந்திலேயே இப்படி விளையாடி விக்கெட்டை பரிசளித்துள்ளீர்கள்”
சுமாரான பண்ட்:
“இந்தியாவுக்கு இந்த சூழ்நிலை தேவையில்லை. நீங்கள் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டும். இது உங்களுடைய இயற்கையான ஆட்டம் என்று சொல்ல முடியாது. மன்னிக்கவும். இது உங்களுடைய இயற்கையான ஆட்டம் இல்லை. இது ஸ்டுப்பிட் ஷாட். இது உங்களுடைய அணியை மோசமாக கீழே தள்ளும் விஷயமாகும். இது டி20 அல்லது 50 ஓவர் ஆட்டம் கிடையாது”
இதையும் படிங்க: 9வது இடத்தில் 81 ரன்ஸ்.. முதல் பந்திலேயே விக்கெட்.. பாகிஸ்தானை மிரட்டிய தெ.ஆ வீரர் உலக சாதனை
“முந்தைய போட்டிகளில் அங்கே ஃபீல்டர் இல்லாததால் அப்படி அடித்தது நல்ல ரிஸ்க் ஆகும். இவருக்கு இதை விட்டால் அல்லது இறங்கி சென்று அடிப்பதை விட்டால் வேறு ஷாட்டுகள் தெரியாது போலிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் எப்போதும் இது போன்ற வழியில் ரன்கள் குவிக்க முடியாது. இப்படியே நீங்கள் விளையாடினால் 5வது இடத்தில் அசத்த முடியாது. 20 – 39 ரன்களுக்குள் 13 முறை அவுட்டான நீங்கள் 3 முறை 50 ரன்கள் அடித்துள்ளீர்கள். இது போதுமா?” எனக் கூறினார்.



