
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது. அப்போட்டியில் 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி இந்தியா 0/2 என சரிந்தது. அதனால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு ராகுல் 90, கேப்டன் கில் 103 ரன்கள் அடித்து கை கொடுத்தனர்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜடேஜா, சுந்தர் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தி சதத்தை நெருங்கினர். அப்போது இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்று உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை முடித்துக்கொள்ள வந்தார். ஆனால் அதை கேப்டன் கில் ஏற்காததால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜாவும் சுந்தரும் சதத்தை அடித்ததும் இந்தியா போட்டியை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.
முன்னதாக அந்தப் பரபரப்பான தருணத்தில் ஹரி ப்ரூக் அல்லது பென் டக்கெட் போன்ற பகுதி நேர பவுலர்களுக்கு எதிராக விளையாடி தான் நீங்கள் சதத்தை அடிக்க விரும்புகிறீர்களா? என்று ஜடேஜாவிடம் கேப்டன் ஸ்டோக்ஸ் கிண்டளாக கேட்டார். அப்படி இந்தியாவை கொச்சைப்படுத்திய ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை தாம் கேப்டனாக இருந்திருந்தால் எஞ்சிய நாள் முழுவதும் விளையாட வைத்து சோர்வடைய செய்து துவைத்து அனுப்பியிருப்பேன் என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது பற்றி ஸ்போர்ட்ஸ்டார் இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டியின் கடைசி மணி நேரத்தில் ஸ்டோக்ஸ் கை கொடுக்க வந்த போது சில எரிச்சலான இங்கிலாந்து வீரர்கள் ஜடேஜா மற்றும் சுந்தர் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத இந்திய பேட்ஸ்மேன்கள் சதத்தை அடித்தார்கள்”
“எப்படியும் வெற்றி பெறப்போவதில்லை என்று உணர்ந்த இங்கிலாந்து வீரர்கள் இந்தியா தங்களுடைய முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். அங்கே இரு அணிகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே போட்டி முடியும், இல்லையென்றால் எதிரணி முடிவை ஏற்க வேண்டும் என்பதை இங்கிலாந்து மறந்து விட்டது போல் தெரிகிறது. சொல்லப்போனால் 80களில் இருந்த இந்திய பேட்ஸ்மேன்களிடம் சதத்தை அடிக்க எங்களுடைய பேட்ஸ்மேன்களை பவுலிங் போட சொல்லட்டுமா? என இங்கிலாந்தினார் கிண்டல் செய்தனர்”
இதையும் படிங்க: வெல்டன் இந்தியா.. ஜடேஜாவை மிரட்டிய அந்த 2 இங்கிலாந்து வீரர்களை ஆஷஸ்ல ஆஸி வெச்சு செய்யனும்.. ஹாடின் விளாசல்
“அப்படி கிண்டலடித்த அவர்கள் இங்கிலாந்தின் முன்னணி பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் 4 மணிநேரம் எதிர்கொண்டு 80 ரன்களை தொட்டனர் என்பதை மறந்து விட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தை அடிப்பது ஒவ்வொரு போட்டியிலும் நடக்காது. எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் அதை தொடுவதற்கு தகுதியானவர்கள். ஒருவேளை நான் கேப்டனாக இருந்திருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களிடம் “எஞ்சிய ஓவர்கள் முழுவதும் விளையாடி இங்கிலாந்து வீரர்களை இன்னும் சோர்வடைய வையுங்கள்” என்று தெரிவித்திருப்பேன். குறிப்பாக அவர்களுடைய ட்ராவை ஏற்றுக்கொள்ளாத போது செய்த கிண்டல்களுக்காக அதை செய்திருப்பேன்” என்று கூறினார்.