ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து அசத்தியது. அப்போட்டி முதல் 2 நாட்களுக்குள் முடிந்தது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சொல்லப்போனால் அது 21ஆம் நூற்றாண்டில் மிகவும் குறைந்த பந்துகளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியாகவும் சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்தியாவில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியாவது 3 நாளில் முடிந்ததாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவில் முதல் நாளிலேயே 19 விக்கெட்டுகள் விழுந்து 2 நாட்களில் முடிந்த பெர்த் போட்டி பற்றி வெளிநாட்டவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை என்று கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இந்தியா மட்டும் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைக்கிறது என்ற வெளிநாட்டவர்களின் விமர்சனங்கள் ஓயவில்லை என்றும் கவாஸ்கர் சாடியுள்ளார்.
எல்லாத்தையும் நிறுத்துங்க:
அத்துடன் வெளிநாட்டு அம்பயர்கள் தவறு செய்தால் அது மனித தவறு என்றும், இந்திய அம்பயர்கள் தவறு செய்தால் அது ஏமாற்று வேலை என்றும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சிப்பதாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா மீதான ஒரு தலைப்பட்ச விமர்சனங்களை இனிமேலாவது வெளிநாட்டவர்கள் நிறுத்த வேண்டும் என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பெர்த் போட்டி 32 விக்கெட்டுகள் விழுந்து 2 நாட்களுக்குள் முடிந்தது. முதல் நாளில் 19 விக்கெட்டுகள் விழுந்தும் அந்த பிட்ச் பற்றி இதுவரை எந்த விமர்சன வார்த்தையும் வரவில்லை. பெர்த்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய போட்டியிலும் முதல் நாளில் 17 விக்கெட்டுகள் விழுந்தது. ஆனால் அப்போதும் அது பற்றி யாரும் விமர்சித்ததை என்னால் நினைவு கூற முடியவில்லை. அந்த பிட்ச்சில் வழக்கத்தை விட அதிகமான புற்கள் இருந்தது”
கவாஸ்கர் பதிலடி:
“அதே தொடரில் சிட்னியில் முதல் நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்தன. அந்த பிட்ச்கள் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றுக்கு சாதகமாக இருந்ததாக விவாதங்கள் வந்தது பரவாயில்லை. ஆனால் அதே போல இந்தியாவில் சுழல் இருப்பதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்? அதைப் பற்றி கேட்கும் போது உங்களுக்கு வேகத்தை எதிர்கொள்ள தெரியவில்லை என்ற வாதம் வருகிறது”
இதையும் படிங்க: இந்த அறிவார்ந்த முடிவு எனக்கு புரியல.. சுந்தரை ஏன் அங்க களமிறக்கல? கம்பீரை சாடிய சாஸ்திரி
“அதே போல உங்களால் இந்தியாவில் சுழலை எதிர்கொள்ளத் தெரியவில்லை என்ற வாதம் ஏன் வர மறுக்கிறது? இது வெளிநாட்டு அம்பயர்கள் செய்யும் தவறுகள் மனிதத்தவறு, இந்திய அம்பயர்கள் செய்யும் தவறுகள் ஏமாற்று வேலை என்ற பழைய கருத்தைப் போலவே இருக்கிறது. அது பற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற சில இந்திய வீரர்கள் (அஸ்வின்) கேள்வி எழுப்பியதைப் பார்த்தது நன்றாக இருந்தது. எனவே இது இந்திய கிரிக்கெட்டின் மீது விரலைக் காட்டுவதை நிறுத்துவதற்கான நேரமாகும். ஏனெனில் எஞ்சிய 3 விரல்கள் உங்களைக் காட்டுகின்றன” என்று கூறினார்.



