
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்துள்ளன. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களது 3 குரூப் சுற்றுப் போட்டிகளிலும் 3 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. அதைத் தொடர்ந்து மார்ச் நான்காம் தேதி துபாயில் நடைபெறும் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி வலுவான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
ஐசிசி தொடர்கள் என்று வந்தாலே கில்லியாக செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்ததை மறக்க முடியாது. சமீபத்தில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா தோற்கடித்தது. எனவே இம்முறையும் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் துபாய் மைதானம் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா தவிர்த்து தரமான ஸ்பின்னர்கள் இல்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் கமின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் விலகியதும் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு என்று அவர் கூறியுள்ளார். அந்த வகையில் 2 பலவீனத்தைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா அதிரடியான பேட்டிங்கை கொண்டிருப்பதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
எனவே சிறப்பாக விளையாடி சேசிங் செய்யும் பட்சத்தில் இந்தியா வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த பிட்ச்சில் ஆம் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வலுவான ஸ்பின் அட்டாக் இருப்பதாக தெரியவில்லை. அது போக ஜோஸ் ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ் ஆகிய முக்கிய வீரர்களையும் அவர்கள் தவற விட்டுள்ளனர்”
“அவர்களுடைய பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கிறது. எனவே ஆஸ்திரேலியா சேசிங் செய்வதை விட இந்தியா சேஸ் செய்வது வெற்றியைப் பெறுவதற்கான விஷயமாகும். நியூசிலாந்துக்கு எதிரான கடந்தப் போட்டியில் ஆரம்பக்கட்ட ஓவர்களில் துபாய் பிட்ச்சில் நமது ஸ்பின்னர்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல அது நன்றாக மாறியது”
இதையும் படிங்க: அரையிறுதி போட்டிக்கான அணியில் இருந்து விலகிய அதிரடி பேட்ஸ்மேன் – விவரம் இதோ
“ரோலிங் செய்த பின் பனி ஓய்ந்த பின் ஸ்பின்னர்களுக்கு நிறையப் பிடிப்பு கிடைத்தது. ஆனால் அதற்காக துபாய் பிட்ச்சில் பேட்டிங் செய்வது அசாத்தியம் என்று அர்த்தமல்ல. கொஞ்சம் சுழல் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திய நமது ஸ்பின்னர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதை அசாத்தியமாக மாற்றினர்” என்று கூறினார்.