
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து தோற்றது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது. இந்த அடுத்தடுத்த தோல்விகள் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
அந்த தோல்விக்கு அடிக்கடி மாற்றங்கள் மற்றும் தவறான தேர்வுகளை செய்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முக்கிய காரணமானதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதனால் கௌதம் கம்பீர் பதவி விலக வேண்டும் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இருந்திருந்தால் இந்தியா 2வது ஒய்ட்வாஸ் தோல்வியை சந்தித்திருக்காது என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருந்தால் மட்டும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வென்றிருக்குமா? என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் அவர்கள் இருந்த போதே நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 3 – 0 என்ற கணக்கில் தோற்றதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் இந்தியா 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த தோல்விகளே விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கான விதையையும் விதைத்தது. எனவே அந்த தோல்விகளை மறந்து விட்டு தற்போது விராட், ரோஹித் இருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்லாதீர்கள் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இல்லை. ஓய்வு முடிவு அவர்களுடைய சொந்த முடிவாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை உங்களுடைய வருங்காலத்தைப் பற்றி முடிவெடுங்கள் என்று விராட் கோலி, ரோஹித் சர்மாவிடம் தேர்வாளர்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் இருந்திருந்தால் நாம் வென்றிருப்போம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் நியூசிலாந்திடம் தோற்ற போது அவர்கள் நமது அணியில் இருந்தனர்”
இதையும் படிங்க: சச்சின் – டிராவிட் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் – கோலி ஜோடி – விவரம் இதோ
“அவர்கள் இருந்த போது நாம் 0 – 3 என்ற கணக்கில் தோற்கவில்லையா? அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது? எனவே இந்த வரிகளையும் நாம் சிந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாம் அவர்களை ஓய்வை நோக்கி தள்ளினோம் என்று சிந்திக்கக்கூடாது. அப்படி சிந்திப்பது தவறான அணுகுமுறையாகும்” என்று கூறினார்.