18 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ கேப்டன்களை கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மூன்று முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரை கைப்பற்றிய ஆர்.சி.பி அணி தங்களது 18 ஆண்டு கால சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த வகையில் பெங்களூரு அணிக்காக முதல் கோப்பையை ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி பெற்றுக் கொடுத்துள்ளது.
ரஜத் பட்டிதாரின் இந்த குணம் தான் கோப்பையை வெல்ல காரணம் : சுனில் கவாஸ்கர்
இந்த 2025 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றிற்கு இரண்டாம் இடத்தை பிடித்து முன்னேறி இருந்த வேளையில் முதலாவது குவாலிபயர் போட்டியில் மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு முறை பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் பெங்களூரு அணித்தேர்வின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் இந்த தொடரின் இறுதியில் அவர்களது அணி சாம்பியன் பட்டத்தை வென்று அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இவ்வேளையில் ஆர்.சி.பி அணியை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன் ரஜத் பட்டிதார் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு ரஜத் பட்டிதாரின் கேப்டன்சி மிகவும் சுவாரசியமாக இருந்தது. பொதுவாகவே ஆர்.சி.பி அணி பல நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய அணி. இந்த ஆண்டும் ஆர்.சி.பி அணியில் நட்சத்திர வீரர்கள் பலரும் இடம் பிடித்திருந்தனர்.
இப்படி ஒரு அணியை சரியாக அவரால் நிர்வகிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தன்னைவிட மூத்த வீரர்கள் இருந்தும் சர்வதேச அளவில் அனுபவம் உடைய வீரர்கள் இருந்தும் அவர்களை ரஜத் பட்டிதார் மிகச் சிறப்பாக கையாண்டார். மூத்த வீரர்களிடம் இருந்து அவர் பெற்ற ஆதரவு அவருடைய தலைமை பண்பு எவ்வாறு இருக்கிறது என்பதை காட்டுகிறது.
இதையும் படிங்க : இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டத்தை பார்க்குறது உண்மையிலேயே கஷ்டம்.. ஆர்.சி.பி பேன்ஸ் கிரேட் – பிலிப் சால்ட் பேட்டி
களத்தில் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் தேவைப்படும் போதெல்லாம் அனுபவ வீரர்களிடம் சென்று அறிவுரை கேட்டு அதற்கேற்றார் போல் செயல்பட்டார். எவ்வித தயக்கமும் இன்றி விராட் கோலியுடன் இணைந்து பேசி சில முக்கிய முடிவுகளை எடுத்தார். இப்படி அவர் ஈகோ இல்லாமல் இயல்பாக இருந்ததாலே அவரால் கேப்டனாக கோப்பையை வெல்ல முடிந்தது என சுனில் கவாஸ்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



