
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 36 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. அதனால் அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்கிய 2வது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்தை 259 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது.
டேவோன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்ததால் 201-4 என ஒரு கட்டத்தில் நியூசிலாந்து நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் சிறப்பாக பந்து வீசி அந்த அணியை சுருட்டிய இந்தியாவுக்கு தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். பின்னர் விளையாடும் இந்தியா முதல் நாளில் 16-1 ரன்கள் எடுத்துள்ளது.
ரோஹித் சர்மா டக் அவுட்டான இந்திய அணிக்கு களத்தில் சுப்மன் கில் 10*, ஜெய்ஸ்வால் 6* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் விளையாடாத தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை பிசிசிஐ இரண்டாவது போட்டியில் தேர்ந்தெடுத்தது. அப்போது நியூசிலாந்து அணியில் இருக்கும் நிறைய இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பதற்காக சுந்தர் தேர்வு செய்யப்பட்டதாக பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்தார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் குல்தீப் யாதவை நீக்கிய ரோஹித் சர்மா நேரடியாக வாஷிங்டன் சுந்தருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்தது ஆச்சரியமாக அமைந்தது. அந்த நிலையில் முதல் போட்டியில் சந்தித்த தோல்வியால் பதற்றமடைந்த பேட்டிங் பற்றி காரணத்தாலேயே இந்திய அணி நிர்வாகம் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக சுனில் கவாஸ்கர் இன்று காலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விமர்சித்தார்.
மேலும் இடது கை பேட்ஸ்மேன்களை சமாளிக்க தாமாக இருந்திருந்தால் குல்தீப் யாதவை தேர்ந்தெடுத்திருப்பேன் என்றும் கவாஸ்கர் கூறியிருந்தார். ஆனால் கடைசியில் வாசிங்டன் சுந்தர் முதல் நாளிலேயே 7 விக்கெட்டுகளை எடுத்து அவருடைய முகத்தில் கரியை பூசும் வகையில் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் முதல் நாள் மாலையில் சுந்தர் தேர்வு பற்றி கவாஸ்கர் பாராட்டி பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: எனக்கு வாய்ப்பளித்த அந்த 2 பேருக்கும் நன்றி.. நியூஸிலாந்தை சுருட்ட இதை தான் செஞ்சேன்.. சுந்தர் பேட்டி
“என்ன ஒரு உத்வேகத்தை கொடுக்கக் கூடிய தேர்வு. வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் பேட்டிங் செய்வார். கொஞ்சம் பவுலிங் செய்வார். அதனாலேயே பிளேயிங் லெவனில் எடுக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார். அந்த வகையில் விமர்சித்த ஜாம்பவான் முன்னாள் வீரரை ஒரே நாளில் பாராட்ட வைக்கும் அசத்தியுள்ள சுந்தர் தமிழக ரசிகர்களை பெருமையடைய வைத்துள்ளார்.