ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா தங்களது முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் இந்தியாவுக்காக 224 நாட்கள் கழித்து நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடினார்கள்.
கடைசியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதனால் சுமார் 7 மாதங்கள் கழித்து இத்தொடரில் களமிறங்கிய அவர்களின் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோஹித் சர்மா 8, விராட் கோலி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
சொதப்பிய காரணம்:
அவர்களுடைய மோசமான ஆட்டம் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. இந்நிலையில் முதல் போட்டி நடைபெற்ற பெர்த் மைதானத்தில் அதிகப்படியான பவுன்ஸ் இருந்ததாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே 7 மாதங்கள் கழித்து விளையாடும் விராட், ரோஹித் ஆகியோரால் அதை சமாளிப்பது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனாலேயே முதல் போட்டியில் சொதப்பிய அவர்கள் எஞ்சிய 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியா 300 ரன்கள் அடிக்க உதவுவார்கள் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் ஆஸ்திரேலியாவில் அதிகம் பவுன்ஸ் நிறைந்த மைதானத்தில் விளையாடினார்கள். அப்படிப்பட்ட மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சில மாதங்கள் மட்டும் விளையாடும் அவர்களால் உடனடியாக அசத்துவது எளிது கிடையாது”
கவாஸ்கர் நம்பிக்கை:
“தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயரால் கூட அந்த சவாலை சமாளிக்க முடியவில்லை. இப்போதும் இந்தியா நல்ல அணி. அவர்கள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார்கள். எனவே விராட், ரோஹித் அடுத்த 2 போட்டிகளில் பெரிய ரன்கள் குவித்தால் ஆச்சரியப்படாதீர்கள். ஏனெனில் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் கொஞ்சம் இடைவெளிக்கு பின் விளையாட வந்துள்ளனர்”
இதையும் படிங்க: 2 ஆல் ரவுண்டர்ஸ் பத்தலயா? அவரை பெஞ்சில் விட்டுட்டு இந்தியா ஜெய்க்க முடியாது.. கம்பீரை சாடிய அஸ்வின்
“அதிகமாக பயிற்சிகளை எடுத்து விளையாடும் போது அவர்களால் நன்றாக அசத்த முடியும். எனவே ஒருமுறை அவர்கள் ரன்கள் அடிக்கத் துவங்கி விட்டால் இந்தியாவும் 300 – 300க்கும் மேற்பட்ட ரன்களை குவிக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



