அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டிசம்பர் 7ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக அந்தப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நம்பிக்கை நட்சத்திர சீனியர் வீரர்கள் மீண்டும் இந்தியாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்கள். குறிப்பாக கடந்த போட்டியில் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் போட்டியில் ஸ்டார்க் வீசிய அவுட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் கொஞ்சம் பவுன்ஸாகி வந்த பந்தில் எட்ஜ் கொடுத்த அவர் 7 ரன்னில் அவுட்டானார்.
கவாஸ்கர் விமர்சனம்:
கடந்த பல வருடங்களாகவே இப்படி அவுட் சைட் ஆஃப் ஸ்ம்டப் பந்துகளில் விராட் கோலி அவுட்டாவது வாடிக்கையாகி வருகிறது. இத்தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுட்டானாதைப் போலவே இப்போட்டியிலும் விராட் கோலி அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் அது போன்ற பந்துகளை எளிதாக தவற விட்டால் விக்கெட்டை விடாமல் தவிர்க்கலாம் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
அது பற்றி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஜியோ சினிமா சேனலில் விமர்சித்தது பின்வருமாறு. “முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நடந்தது தற்போது இங்கு மீண்டும் நடந்துள்ளது. அது ஹைக் பேக் லிப்ட் காரணமாகவும் நடந்தது என்று நினைக்கிறேன். அது போன்ற பந்துகளை நீங்கள் சரியான நேரத்தில் வீழ்த்த முடியாது. மாறாக அந்த பந்துகளுக்கு பாதிப்பில்லாமல் தவற விட்டு செல்ல அனுமதிக்க வேண்டும்”
அனுபவம் இருந்தும்:
“ஆனால் விராட் கோலி நுட்பத்துடன் பேட்டிங் செய்து 9000 ரன்களை எடுத்த அனுபவம் கொண்டவர். அப்படி இருந்தும் அதே போல அவர் 2 முறை அவுட்டானார். இருப்பினும் அதற்காக நான் அதிகம் கவலைப்பட மாட்டேன். ஏனெனில் அவர் 30 சதங்கள் அடித்துள்ளார். அவருக்கு பேட்டிங் செய்ய தெரியும். முதல் போட்டியை போல இப்போட்டியிலும் அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லை”
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் பாடத்தை கத்துருப்பாரு.. இனிமேலாவது இதை செய்யாம கவனமா விளையாடனும்.. ஜஸ்டின் லாங்கர்
“ஆனாலும் இந்தத் தொடரில் அசத்துவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது” என்று கூறினார். இதை அடுத்து இரண்டாவது நாளில் இந்திய அணி விரைவாக ஆஸ்திரேலியாவை சுருட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் அசத்த வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.



