அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாளில் 86-1 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக இந்தத் தொடரின் முதல் போட்டியில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அப்போட்டியில் ஆஸ்திரேலிய அனுபவ வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை சிறப்பாக எதிர்கொண்ட அவர் ஒரு பவுண்டரி அடித்தார்.
ஜெய்ஸ்வால் – ஸ்டார்க்:
அதற்கடுத்த பந்தை எதிர்கொண்ட பின் “நீங்கள் மிகவும் மெதுவாக பந்து வீசுகிறீர்கள்” என்று அவரிடம் ஜெய்ஸ்வால் சொன்னது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் 140 – 150 கி.மீ வேகத்தில் பெரும்பாலும் வீசக்கூடிய ஸ்டார்க் உலகின் விராட் கோலி போன்ற பல டாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கக் கூடியவராக அறியப்படுகிறார். சொல்லப்போனால் அதை இந்தப் போட்டியில் அவர் நிரூபித்துள்ளார் என்றே சொல்லலாம்.
ஏனெனில் போட்டியின் முதல் பந்திலேயே அவர் ஜெயஸ்வாலை கோல்டன் டக் அவுட்டாக்கி தனது தரத்தை நிரூபித்து தக்க பதிலடி கொடுத்தார். இந்நிலையில் கிரிக்கெட்டில் பொதுவாக பவுலர்களிடம் இப்படி மோதும் போது கடைசியில் பேட்ஸ்மேன்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் அதை தாம் சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லாங்கர் அட்வைஸ்:
எனவே இனிமேலாவது ஜெய்ஸ்வால் தம்முடைய ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி லாங்கர் பேசியது பின்வருமாறு. “எப்போதும் பவுலர்கள் தான் கடைசி சிரிப்பை பெறுவார்கள் என்பதை நான் என்னுடைய இளம் வயதிலேயே கற்றுக் கொண்டேன். ஏனெனில் அவர்களிடம் எப்படியும் நீங்கள் அவுட்டாவீர்கள்”
இதையும் படிங்க: இந்த ஒன்னு போதும்.. 22 வயது பயமற்ற குழந்தை நிதிஷ் ரெட்டி அதுக்கு சரியானவர்.. கவாஸ்கர் பாராட்டு
“பவுலர்களிடம் நீங்கள் கொஞ்சம் மோதுவீர்கள். ஆனால் கடைசியில் பவுலர்கள் உங்களை அவுட்டாக்கி சிரிப்பார்கள். இந்தப் பாடத்தை நான் ஆரம்பத்திலேயே கற்றுக் கொண்டேன். அந்த வகையில் இங்கே மிட்சேல் ஸ்டார்க் கடைசியாக சிரித்தார்” என்று கூறினார். இதை அடுத்து இப்போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு ஆஸ்திரேலியாவை விரைவாக அவுட் செய்து போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.