அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் ஆறாம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதை அடுத்து விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 82-1 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் நித்திஷ் ரெட்டி இந்தியாவுக்காக அறிமுகமானார். உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரியளவில் விளையாடிய அனுபவமில்லாத அவருக்கு சவாலான ஆஸ்திரேலியாவில் வாய்ப்பு கொடுத்ததற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் தெரிவித்திருந்தார்.
நிதிஷ் அசத்தல்:
குறிப்பாக நித்திஷ் ரெட்டி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்கிறாரா என்று கவனத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் முதல் போட்டியிலேயே 41, 38* ரன்கள் குவித்து ஒரு விக்கெட் எடுத்து வெற்றியில் பங்காற்றிய அவர் இப்போட்டியில் 42 ரன்கள் எடுத்து மீண்டும் இந்திய அணிக்கு கை கொடுத்துள்ளார். குறிப்பாக ஸ்டார்க், போலண்ட் ஆகியோருக்கு எதிராக அவர் ஹூக், ரிவர்ஸ் ஸ்வீப் வாயிலாக சிக்ஸர்கள் அடித்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
இந்நிலையில் நித்திஷ் ரெட்டி இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவதற்கு தகுதியான வீரர் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மிகவும் பொழுதுபோக்குடன் விளையாடிய அவர் கிரிக்கெட்டுக்கு தேவையான நல்ல தலையை தன்னுடைய தோளில் வைத்துள்ளார். அதாவது சூழ்நிலையை படித்து அவர் விளையாடுகிறார்”
கவாஸ்கர் பாராட்டு:
“அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பெரிய ஷாட் அடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏனெனில் ஏற்கனவே அவருடன் டெயில் எண்டர்கள் பேட்டிங் செய்கிறார்கள். அப்போது ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த அவர் பின்னர் ஹூக் வாயிலாக சிக்சர் அடித்தார். இப்படி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடும் ஆட்டம் அவர் நீண்ட காலம் அசத்துவதற்கு தகுதியானவர் என்பதை பரிந்துரைக்கிறது”
இதையும் படிங்க: அந்த 2 தொடர்களையும் எனக்கு எதிரியா இருந்த ரிஷப் பண்ட்.. இப்போ நண்பனா மாறிட்டாரு.. ஜஸ்டின் லாங்கர்
“22 வயது மட்டுமே நிரம்பிய குழந்தையான இவர் பயமற்ற இளைஞர் என்பதை காண்பித்துள்ளார். அவரிடம் அற்புதமான தன்னம்பிக்கை இருக்கிறது. அவரை களத்தில் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல வீரராக இருப்பார் என்பது உங்களுக்கு தோன்றுகிறது. அந்த ரிவர்ஸ் ஸ்கூப் வாயிலாக அடித்த சிக்ஸரை மட்டும் பாருங்கள். அது மைதானத்தின் மிகப்பெரிய பகுதியில் வந்துள்ளது” என்று கூறினார்.