
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னதாக அந்தத் தொடரில் புனே நகரில் நடைபெற்ற நான்காவது போட்டியில் கடைசி ஓவரின் 5வது பந்தில் சிவம் துபே ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அப்போது அவரை சோதித்த அணி மருத்துவர் பிரச்சனை எதுவுமில்லை என்று சொன்னதால் தொடர்ந்து விளையாடிய துபே ரன் அவுட்டானார்.
அடுத்ததாக இங்கிலாந்து பேட்டிங் செய்த போது சப்ஸ்டிடியூட் விதிமுறையை பயன்படுத்திய இந்தியா ராணாவைக் கொண்டு வந்தது. அந்த வாய்ப்பில் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவின் 15 ரன்கள் வித்தியாச வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆனால் ஆல் ரவுண்டர் துபேவுக்கு பதிலாக பவுலரான ராணாவை இந்தியா பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜோஸ் பட்லர் உள்ளிட்ட இங்கிலாந்தினர் விமர்சித்தார்கள்.
இந்நிலையில் ஒருவேளை 4வது போட்டியில் தோற்றால் கூட கடைசிப் போட்டியில் வென்று தொடரை வெல்லும் திறமை இந்தியாவிடம் இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே சப்ஸ்டிடியூட் விதிமுறையை சரியாகப் பயன்படுத்தாமல் இந்தியாவின் பெயரைக் கெடுக்காதீர்கள் என்று கௌதம் கம்பீரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“புனேவில் நடைபெற்ற போட்டியில் தலையில் அடிபட்ட பின்பும் துபே கடைசி வரை விளையாடினார். எனவே அவரை சப்ஸ்டிடியூட் விதிமுறைக்கு உட்படுத்துவதற்கு சரியானவர் அல்ல. அதையும் தாண்டி சப்ஸ்டிடியூட் விதிமுறையை அனுமதித்தது சரியான முடிவல்ல. ஆம் ஒருவேளை பேட்டிங் செய்யும் போது அவர் தனது தசையில் அடி வாங்கியிருந்தால் மாற்று வீரர்களை பயன்படுத்தலாம்”
“அதுவும் ஃபீல்டிங் செய்வதற்கு மட்டுமே இருக்க வேண்டும் பவுலிங் செய்யக்கூடாது. மாற்று வீரருக்கு சரியான மாற்று வீரர் என்ற வகையில் பார்க்கும் போது துபே ராணாவுக்கு இடையே எதுவும் ஒற்றுமையாக இல்லை. எனவே அதை விமர்சிப்பதற்கான அனைத்து காரணங்களும் இங்கிலாந்து அணிக்கு இருந்தது. இந்த இந்திய அணி மிகவும் சூப்பரான அணியாகும்”
இதையும் படிங்க: 29 விக்கெட்ஸ்.. வருண் தலைமையில் இங்கிலாந்தை சுழற்றி வீழ்த்திய இந்தியா.. 2021 நியூஸிலாந்தை முந்தி உலக சாதனை
“இது போன்ற செயல்களால் நம்முடைய வெற்றியை களங்கமடைய வைக்கத் தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே தடுமாறிய நாம் பாண்டியா துபே ஆகியோரால் 181 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடும் அளவுக்கு வந்தோம். ஒருவேளை ராணா விளையாடாமல் 3 விக்கெட்டுகள் எடுக்காமல் இருந்தால் கூட மும்பையில் நம்மால் சிறந்த அணி என்று காண்பிக்க முடியும்” எனக் கூறினார். மேலும் சப்ஸ்டிடியூட் விதிமுறை மிகவும் மோசமான ஒன்று என்று தெரிவித்த கவாஸ்கர் அது மறு சீரமைக்கப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.