இங்கிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. குறிப்பாக மும்பையில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா 248 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த இங்கிலாந்தை மிரட்டலாக பந்து வீசிய இந்தியா 10.3 ஓவரில் 97க்கு சுருட்டி வீசியது.
அதனால் 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக தங்களது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் தங்களை உலக டி20 சாம்பியன் என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு மொத்தம் 14 கிரிக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தொடர்நாயகன் விருதை வென்றார்.
வருண் தலைமையில்:
அவரைப் போலவே இந்தத் தொடரில் அக்சர் பட்டேல், ரவி பிஸ்னோய் உள்ளிட்ட மற்ற ஸ்பின்னர்களும் அசத்தினார்கள். அவர்களுடைய அசத்தலால் இந்தத் தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் இங்கிலாந்தின் 50 விக்கெட்டுகளில் இந்தியா ஸ்பின்னர்களை மட்டும் வைத்து 29 விக்கெட்டுகள் எடுத்தது. இதன் வாயிலாக ஒரு சர்வதேச இருதரப்பு டி20 தொடரில் ஸ்பின்னர்கள் வைத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து ஸ்பின்னர்கள் 23 விக்கெட்டுகள் எடுத்து 3 – 2 (5) என்ற கணக்கில் தங்களது அணியை வெற்றி பெற வைத்தார்கள். அதுவே முந்தைய உலக சாதனையாகும்.
இந்தியா தயார்:
அந்த வகையில் வருண் சக்கரவர்த்தி தலைமையில் இத்தொடரில் இங்கிலாந்து அணியை ஸ்பின்னர்களை வைத்து இந்தியா சுழற்றி வீழ்த்தியது என்றும் சொல்லலாம். இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் அந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: 14 விக்கெட்ஸ்.. தனது சொந்த சாதனையை உடைத்த வருண்.. அஸ்வின் உட்பட எந்த இந்திய வீரரும் செய்யாத 2 சாதனை
அந்தத் தொடரின் முதல் போட்டி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி விளையாட உள்ளது. அதில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள்.



