நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் முறையாக சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஆனால் சொந்த மண்ணிலேயே இந்தியா தற்போது மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இம்முறையும் இந்தியா வெல்லுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா சொந்தக் காரணங்களுக்காக விலக உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 3 – 0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துள்ள இந்திய அணியை ஆஸ்திரேலியாவில் முழுமையாக ஒரு வீரர் நடத்த வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கவாஸ்கர் கோரிக்கை:
எனவே ஒருவேளை ரோஹித் சர்மா முதல் போட்டியில் விலகினால் அவரை முழுமையாக கழற்றி விட்டு ஜஸ்ப்ரித் பும்ராவை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கேப்டனாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் கேப்டன் கண்டிப்பாக ஓப்பனிங் போட்டியில் விளையாட வேண்டும். ஒருவேளை காயத்தை சந்தித்திருந்தால் அது வேறு கதை”
“ஆனால் முதல் போட்டியிலேயே கேப்டன் விளையாடவில்லையெனில் அது துணை கேப்டன் மீது அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்கும். ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் 2வது போட்டியில் விளையாடுவார் என்று செய்திகள் காணப்படுகின்றன. ஒருவேளை அது உண்மையெனில் ரோகித் சர்மாவிடம் “நீங்கள் ஓய்வை விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களை சாதாரண வீரராக மட்டுமே தேர்ந்தெடுப்போம்” என்று அகர்கர் சொல்ல வேண்டும்”
கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா:
“நீங்கள் விரும்பும் நேரத்தில் இந்திய அணியுடன் இணைந்து கொள்ளலாம் என்றும் அவரிடம் அகர்கர் சொல்ல வேண்டும். ஏனெனில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தெளிவான முடிவெடுக்க வேண்டியது அவசியம். ஒருவேளை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருந்தால் இது வேறு மாதிரியாக இருந்திருக்கும்”
இதையும் படிங்க: தூங்குற ராட்ஷசனை எழுப்பிட்டீங்க.. இந்தியாவின் 3 – 0 தோல்வி பற்றி ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் பேட்டி
“2020 – 21 ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியிக்குப்பின் விராட் கோலி நாடு திரும்புவார் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. அதனால் துணை கேப்டன் ரஹானே மற்ற வீரர்களை வழி நடத்துவதற்கு சூழல்கள் ஆரம்பத்திலேயே எளிதாக தெரிந்தது” என்று கூறினார். இதையடுத்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியா தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது.



