ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த தொடர் தோல்விகளை நிறுத்திய பெங்களூரு அணி முதல் கோப்பையை வென்று தங்கள் மீதான கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்தது. அதே போல நம்பிக்கை நாயகன் விராட் கோலி ஒரு வழியாக தம்முடைய 18வது முயற்சியில் கோப்பையை வென்றது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.
அந்த எதிர்பார்த்ததைப் போலவே சரித்திர வெற்றியை பெங்களூரு அணி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடித் தீர்த்தார்கள். ஆனால் அந்த வெற்றி முழுதாக 24 மணி நேரம் கூட நீடிக்காமல் சோகத்தில் முடிந்தது. ஏனெனில் கோப்பையை வென்ற கையோடு ஆர்சிபி அணியினர் தங்களுடைய சொந்த ஊரில் இருக்கும் எம் சின்னசாமி மைதானத்தில் ரசிகர்களுடன் வெற்றியைக் கொண்டாடச் சென்றனர்.
சென்னை, மும்பை மாதிரி:
அதை அறிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே ஒன்றாக திரண்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயற்சித்தனர். கடைசியில் காவலர்களின் கட்டுக்கடங்காத அந்தக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதால் 11 ரசிகர்கள் இயற்கை எய்தினர். 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சென்னை, மும்பை அணிகளை போல ஆரம்பக் காலங்களிலேயே பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றிருந்தால் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை ஆர்சிபி அணி முதல் சில வருடங்களிலேயே கோப்பையை வென்றிருந்தால் 18 வருடங்கள் வென்றதால் வந்ததைப் போல இவ்வளவு உணர்வுகள் வெளிப்பட்டிருக்காது”
கவாஸ்கர் ஆதங்கம்:
“மற்ற அணிகளும் கோப்பைகளை வென்றன. ஆனால் அவர்களுடைய கொண்டாட்டங்கள் வெறித்தனமான இல்லை. அதற்கு அவர்களுடைய ரசிகர்கள் 18 வருடங்கள் காத்திருக்காமல் இருந்தது காரணமாக இருந்திருக்கலாம். அப்படி நிறைய காலங்கள் காத்திருந்த தங்களுக்கு வெற்றியைக் கொடுத்த பெங்களூரு அணி வீரர்களுக்கு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியைக் கொடுக்க விரும்பினார்கள்”
இதையும் படிங்க: இன்னும் டெஸ்ட் சீரியஸ்ஸே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள இப்படியா? காயத்தில் சிக்கிய – இந்திய நட்சத்திர வீரர்
“அவர்களுடைய எல்லையற்ற மகிழ்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வருடம் பெங்களூரு 7 வெளியூர் போட்டிகளிலும் வென்றது ஒரு சாதனை. அந்த சாதனை படைத்த தங்களுடைய வீரர்களுக்கு பெங்களூரு ரசிகர்கள் ஸ்பெஷல் பாராட்டைக் கொடுக்க விரும்பினார்கள். ஆனால் அந்த விழாவில் தங்களது வாழ்வை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்” எனக் கூறினார்.